பேச்சு முறிவு - ஈரானிய அணு ஆயுதம் தயார்
இலங்கையில் நாளை மறுதினம் பிறக்கும் பராபவ சித்திரை வருடப்பிறப்பு உள்ளூர் மக்களுக்கு சாதகமாக இருக்கும் என்ற அறிகுறிகளை இன்று காலை அமெரிக்க ஈரானிய பேச்சுக்களின் முறிவின் பின்னரான உலக நிலவரங்கள் வெளிப்படுத்தவில்லை.
பாகிஸ்தான் தலைநகரில் உள்ள செரீனா நட்சத்திர விடுதியில் நேற்று ஆரம்பித்த பேச்சுகள் 21 மணிநேரமாக நடந்தாலும் அதில் உடன்பாடு எதுவும் இல்லை.
இதனால் பேச்சுகள் தோல்வி என அமெரிக்க துணை ஜனாதிபதி வான்ஸ் தனது 4 நிமிட ஊடக மாநாட்டில் சடக்கென சொல்லி விட்டு தனது எயார் போர்ஸ் - 2 விமானத்தில் காலை 7 மணிக்கு படக்கென ஏறி வெடுக்கெனப் பறந்தும் விட்டார்.
இப்போது இந்த பேச்சுகளின் தோல்வி நிலை உலகின் பல ஊடகங்களால் லாவணியாக பாடப்பட்டு அலசப்படும் பின்னணியில் எங்கே டொனால்ட் ட்ரம்ப் என்ற ஒற்றைப்போக்கு மனிதர் ஏற்கனவே சொன்னது போலவே ஈரானை கற்காலத்துக்கு தள்ளும் வகையில் மின் நிலையங்களையும் முக்கிய உள்கட்டமைப்புகளையும் தகர்த்து உலகை பெரும் நெருக்கடிக்குள் தள்ளும் முடிவை எடுத்துவிடுவாரோ என்ற அச்சம் எழுந்துள்ளது.
பேச்சு முறிந்தது என்ற செய்திவந்தபோது ட்ரம்ப் மியாமியில் பிரபல குத்துச்சண்டை போட்டியில் இரண்டு குத்துசண்டை ஜாம்பவான்களான ப்ரோசாஸ்காவும் உல்பெர்க்கும் ஒருவரை ஒருவர் குத்திக்கொண்டதை புன்னகையுடன் ரசித்தமை ட்ரம்ப் ஈரானுடன் அவரும் ஒரு போர் குத்துசண்டையை நடத்த விரும்புகின்றாரோ என்பதற்கும் தன்மைக்கும் ஒரு குறியீடாக தெரிவது போல இருந்தது.
இந்த பேச்சுகளில் அமெரிக்கர்களை விட ஈரானியர்கள் அதிக துருப்புசீட்டுகளை அடித்து தாம் ஒரு உடன்பாட்டுக்கு அவசரப்படவில்லை என்ற தோற்றப்பாட்டை காட்டினர்.
இது ஈரான் அணுஆயுதம் ஒன்றை தயாரிக்கும் கட்டத்தில் இருக்கும் தோற்றப்பாட்டையும் அமெரிக்காவும் இஸ்ரேலும் நினைப்பதை விட ஈரானிடம் அதிக செறிவூட்டப்பட்ட யுரேனியம் இரகசியமாக இருக்ககூடுமோ என்ற எண்ணத்தையும் உருவாக்கியுள்ள நிலையில் இந்த விடயங்களை தழுவி வருகிறது செய்திவீச்சு...
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |