அமெரிக்காவிற்கு கனடாவின் பதிலடி....! வரி விதிப்பை தற்காலிமாக ஒத்திவைத்த ட்ரம்ப்
கனடாவில் இருந்து அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு கூடுதல் சுங்க வரி விதிக்கும் திட்டத்தை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தற்காலிகமாக ஒத்திவைத்துள்ளார்.
கனடிய பிரதமர் மார்க் கார்னி (Mark Carney) உடனான தொலைபேசிப் பேச்சுவார்த்தைக்குப் பிறகு இரு நாடுகளுக்கும் இடையே ஒப்பந்தம் எட்டப்படும் நிலையை எட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனடிப்படையில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஏற்றுமதிப் பொருட்கள்
அமெரிக்கா மீது பாகுபாடு காட்டும் நாடுகளுக்கு எதிராக வரிகளை விதிக்க உதவும் 1930 ஆம் ஆண்டின் அரிதான வரிச் சட்டத்தின் பிரிவு 338 ஐப் (Section 338 of Tariff Act of 1930) பயன்படுத்தி இந்த 50 வீதம் வரியை விதிக்க ட்ரம்ப் திட்டமிட்டிருந்தார்.
இந்தநிலையில் அமெரிக்காவின் தொடர்ச்சியான வரிக் கொள்கைகளுக்குப் பதிலடியாக கனடாவின் பெரும்பாலான மாகாண அரசுகள் அமெரிக்க மதுபானங்கள் மற்றும் திராட்சை ரசங்களை விற்பனை செய்யத் தடை விதித்தன.

இதனால் அமெரிக்காவிலிருந்து கனடாவிற்கு ஏற்றுமதியாகும் மதுபானங்களின் அளவு 81வீதம் வரை சரிந்தது.
இந்த 50 வீதம் வரி அச்சுறுத்தலானது பால் பொருட்கள் (Dairy), வாகனங்கள் மற்றும் மதுபானங்கள் மட்டுமின்றி ஹாக்கி உபகரணங்கள், மரச்சாமான்கள் போன்ற சுமார் ஐந்து வீத கனடிய ஏற்றுமதிப் பொருட்களை பாதிக்கும் வகையில் அமைக்கப்பட்டிருந்தது.
தீவிர பேச்சுவார்த்தை
இந்தநிலையில் மார்க் கார்னி அமெரிக்காவுடன் தீவிர பேச்சுவார்த்தைகளை நடத்தி வரும் நிலையில் கனடாவின் தொழிலாளர்கள், விவசாயிகள் மற்றும் வணிகர்களின் நலனைப் பாதுகாப்பதே தங்களது முதன்மை இலக்கு எனத் தெரிவித்துள்ளார்.
பேச்சுவார்த்தையின் போது கைவிடப்பட்ட கீஸ்டோன் எக்ஸ்எல் குழாய் திட்டத்தை (Keystone XL Oil Pipeline) மீண்டும் உயிர்ப்பிப்பது குறித்து ட்ரம்ப் சுட்டிக்காட்டியதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்தோடு கனடாவிலிருந்து அமெரிக்காவிற்கு கச்சா எண்ணெயைக் கொண்டு செல்லும் இந்தத் திட்டம் நடைமுறைக்கு வந்தால் அது கனடாவிற்குச் சாதகமாக அமையும் எனக் கருதப்படுகிறது.
அமெரிக்காவுடனான ஒப்பந்த பேச்சுவார்த்தைகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள போதிலும் ஒருவேளை அமெரிக்கா 50 வீத வரியைச் செயல்படுத்தினால், செப்டம்பர் எட்டாம் திகதி முதல் அமெரிக்கப் பொருட்களுக்கு நிகரான டொலருக்கு டொலர் (Dollar for Dollar) பதிலடி வரிகளை விதிக்க கனடா தயாராக உள்ளதாக அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 7