பாரிய வரி மோதலுக்கு பின்னர் இந்தியாவை புகழ்ந்து பேசிய ட்ரம்ப்!
இந்தியாவுடன் தனக்கு மிக நெருக்கமான உறவு உள்ளதாகவும் பிரதமர் நரேந்திர மோடியுடன் தனிப்பட்ட நட்புறவைக் கொண்டிருப்பதாகவும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளதார்.
இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மருடன் இணைந்து செக்கர்ஸில் ட்ரம்ப் ஊடகவியலாளர்களை சந்தித்து உரையாற்றிய போதே இதனைத் தெரிவித்துள்ளார்.
அண்மையில் பிரதமர் மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களைத் தெரிவிக்க தொலைபேசியில் உரையாற்றியதாகவும் ட்ரம்ப் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.
பஹல்காம் தாக்குதல்
இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான மோதலை தான் முடிவுக்கு கொண்டு வந்ததாகவும் அந்த மோதலை முடிவுக்கு கொண்டுவந்தது முற்றிலும் வர்த்தகத்திற்காக மாத்திரமே எனவும் ட்ரம்ப் விளக்கியிருந்தார்.
கடந்த ஏப்ரல் மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியாவால் பாகிஸ்தான் மீது ஓபரேஷன் சிந்தூர் மேற்கொள்ளப்பட்டது.
இதனைத்தொடர்ந்து, இந்தியாவும் பாகிஸ்தானும் உடனடி போர்நிறுத்தத்திற்கு ஒப்புக் கொண்ட நிலையில் இந்த மோதலை தானே நிறுத்தியதாக ட்ரம்ப் தொடர்ந்தும் தெரிவித்து வருகின்றார்.
அண்மைக்காலமாக இரு தரப்புகளுக்கும் இடையில் இடம்பெற்ற பாரிய வரி விதிப்பு சிக்கல்களுக்கு பின்னர் ட்ரம்ப் இந்த விடயத்தை விளக்கியுள்ளார்.
எவ்வாறாயினும், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் இந்தக் கருத்தை இந்தியா தொடர்ந்தும் மறுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
