ஈரான் போராட்டங்களில் ட்ரம்பின் தலையீடு! பகிரங்கப்படுத்திய கமேனி
ஈரானில் நீடித்து வரும் அரசாங்க எதிர்ப்புப் போராட்டங்களின் பின்னணிக்கு அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடன் தொடர்புடைய வெளிநாட்டு சக்திகளே காரணம் என்றும் ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி குற்றம் சாட்டியுள்ளார்.
கடந்த பல வாரங்களாக நீடித்து வரும் அரசாங்க எதிர்ப்புப் போராட்டங்களின் போது “பல ஆயிரக்கணக்கான” மக்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும் கமேனி கூறியுள்ளார்.
இது தொடர்பில் உரையாற்றிய கமேனி,
இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா
“இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவுடன் தொடர்புடையவர்கள் நாட்டில் பெரும் சேதங்களை ஏற்படுத்தி, ஆயிரக்கணக்கான மக்களை கொன்றுள்ளனர்” என்று கூறியுள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை அவர் “குற்றவாளி” என விமர்சித்ததுடன், இந்த சதியில் அவர் நேரடியாக ஈடுபட்டதாகவும் குற்றம் சாட்டினார்.
“முந்தைய போராட்டங்களை விட இந்த முறை அமெரிக்காவின் தலையீடு மிகவும் ஆழமாக உள்ளது. ஈரானுக்கு எதிரான இந்த சர்வதேச சதியின் மையத்தில் அமெரிக்க அதிபரே இருக்கிறார்,” என கமேனி தெரிவித்ததாக அந்நாட்டு அரசு ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.
ஈரானுக்கு வெளியே போர் விரிவடைவதைத் தவிர்க்க விரும்புவதாகக் கூறிய அவர், அதே நேரத்தில், “உள்நாட்டு மற்றும் சர்வதேச குற்றவாளிகள் தண்டனை இன்றி விடப்பட மாட்டார்கள்” என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
அதிகாரப்பூர்வ எண்ணிக்கை
அமெரிக்காவை தளமாகக் கொண்ட மனித உரிமைகள் அமைப்பான HRANA, போராட்டங்களில் சுமார் 3,000 பேர் உயிரிழந்துள்ளதாக கூறியுள்ள நிலையில், இதுவரை உறுதிப்படுத்தப்பட்ட அதிகாரப்பூர்வ எண்ணிக்கை வெளியாகவில்லை.
இதன்படி ஈரானிய அரசு, பாதுகாப்புப் படையினர் உட்பட நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்ததை மட்டும் இதுவரை ஒப்புக்கொண்டுள்ளது.
மேலும், “250க்கும் மேற்பட்ட மசூதிகள் மற்றும் மருத்துவமனைகள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன” என்றும், பரவலான சொத்து சேதங்களுக்கு எதிர்ப்பாளர்களே காரணம் என்றும் கமேனி குற்றம் சாட்டியுள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |