தமிழர்களின் காணியை அபகரிக்க முனையும் தேரர்
மட்டக்களப்பு மாவட்டம் படுவாங்கரைப் பகுதியில் அமைந்துள்ள போரதீவுப்பற்று பிரதேசத்தின் எல்லையில் தமிழர்களின் நிலப்பகுதியை சின்னவத்தை விகாராதிபதி குசலானந்த தேரர் அபகரிக்க முற்படுவதாக சின்னவத்தைக் கிராமத்தில் அமைந்துள்ள நாம் தமிழர் பண்பாட்டுக் கழகத்தின் தலைவர் கோபாலன் பிரசாத் தெரிவிக்கின்றார்.
இவ்விடயம் தொடர்பில் இன்று கருத்து வெளியிட்டுள்ள அவர்,
எமது சின்னவத்தைக் கிராமம் பூர்வீக தமிழ் மக்கள் வாழும் கிராமமாகும். ஆனாலும் எமது கிராமத்தின் எல்லையில் 43 சிங்கள குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றார்கள். இதில் ஓர் பௌத்த விகாரையும் அமைந்துள்ளது.
இந்த நிலையில் எமது தமிழ் மக்களின் நிலப்பரப்புக்குள் அமைந்துள்ள சுமார் 6 ஏக்கர் காணியை அங்குள்ள பௌத்த மதகுருவான குசலானந்த தேரர் எடுப்பதற்கு அவரால் இயன்ற அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகின்றார். இதனை எம்மால் சகித்துக் கொண்டிருக்க முடியாது.
தமிழர்களின் நிலப்பகுதியை தேரர் அபகரிக்க முயற்சி
எனவே எமது கிராமத்திலுள்ள பலர் இன்னும் பயிர் செய்வதற்கும், தமது வாழ்வாதாரத்தை மேற்கொள்வதற்கும் காணியின்றியுள்ளார்கள். அவ்வாறானவர்களை அடையாளம் கண்டு இக்காணியைப் பகிர்ந்தளிக்க சம்மந்தப்பட்டவர்கள் உடன் முன்வரவேண்டும்.
இல்லையேல் குறித்த தேரர் எமக்கு தொந்தரவு கொடுத்துக் கொண்டே இருப்பார்.
எனவே மாவட்டத்திலுள்ள மக்கள் பிரதிநிதிகள், அரச அதிகாரிகள் என அனைவரும் ஒன்றிணைந்து இக்காணியை எமது கிராமத்திலுள்ள தமிழ் மக்களுக்கு பகிர்ந்தளிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
