வவுனியாவில் காசநோயாளர்கள் தொடர்பில் வெளியான தகவல்!
காசநோயினால் வவுனியாவில் கடந்த வருடம் மூன்று பேர் இறந்துள்ளதுடன், 58 பேர் நோயாளர்களாக இனம் காணப்பட்டுள்ளதாக வவுனியா காசநோய் கட்டுப்பாட்டு வைத்திய அதிகாரி கே.சந்திரகுமார் தெரிவித்துள்ளார்.
வவுனியாவில் இன்று (23) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு கூறினார்.
மேலும் இம்முறை எங்களால் காசநோயை முடிவுக்கு கொண்டுவர முடியும்' எனும் தொனிப்பொருளில் உலக காசநோய் தினம் மார்ச் 24 ஆம் திகதி நினைவு கூரப்படவுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
மூன்றாவது நோய்
இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,இலங்கையை பொறுத்த வரை ஒரு இலட்சம் பேரில் 62 பேர் காசநோயாளர்களாக இனம் காணப்படவேண்டும். இருப்பினும் 4 ஆயிரம் பேர் வரை இனம் காணப்படாமல் இருக்கின்றனர்.
நாட்டில் இறப்பிற்கு காரணமான மூன்றாவது நோயாக இது காணப்படுகின்றது.
தொடர்ச்சியாக இரு வாரங்களிற்கு மேற்ப்பட்ட இருமல், மாலை நேரத்தில் காய்ச்சல், உணவில் நாட்டம் இன்மை, உடல்நிறை குறைவடைதல், சளியுடன் இரத்தம் வெளியேறல். இப்படியான அறிகுறிகள் தென்பட்டால் அது காசநோயாக இருக்கலாம்.
இறப்பிற்கு வழி
மேற்கூறிய அறிகுறிகள் இருந்தால் அருகில் உள்ள பொது வைத்தியசாலைகளுக்கு சென்று சாதாரண சளிப்பரிசோதனையினை இலவசமாக செய்து கொள்வதன் மூலம் இந்த நோயினை இனம் காணலாம்.
ஒருவருக்கு காசநோய் ஏற்ப்பட்டால் ஆறு மாதத்திற்கு நேரடி கண்காணிப்புடனான சிகிச்சையின் மூலம் மருந்துகளை பெற்றுக்கொண்டால் அதனை முற்றாக குணப்படுத்தலாம்.
அது தொடர்பில் அச்சம் கொள்ளத்தேவையில்லை. சிகிச்சைகளை எடுக்கத் தவறினால் அது தீவிரமடைந்து இறப்பிற்கு வழி வகுக்கும் என்றார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |