நெதன்யாகுவுடனான தொடர்பை முறித்துக்கொள்கிறோம்: பலஸ்தீனிய அரசிற்கு ஆதரவாக மாறும் துருக்கி!
இஸ்ரேலுக்கான தூதரை திரும்பப் பெறுவதாகவும், பிரதமர் நெதன்யாகுவுடனான தொடர்பை முறித்துக் கொள்வதாகவும் துருக்கி அறிவித்துள்ளது.
இஸ்ரேல் நாட்டின் மீது கடந்த 7 ஆம் திகதி ஹமாஸ் தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து, காசா மீது இஸ்ரேல் போர் தொடுத்தது.
தரை, கடல், வான் என 3 வழிகளில் இருந்தும் காசாவை இஸ்ரேல் இராணுவம் தாக்கி வருகிறது. இந்த மும்முனை தாக்குதலில் காசா நகரம் உருக்குலைந்து வருகிறது.
துருக்கி கண்டனம்
இந்த நிலையில் காசா பகுதியில் பொதுமக்கள் மீது இஸ்ரேல் தொடர்ந்து குண்டுவீசி தாக்குதல் நடத்தியதை துருக்கி கண்டித்துள்ளது.
இதன் காரணமாக காசாவில் மனிதாபிமான துயரம் தொடர்பாக இஸ்ரேலுக்கான தூதரை துருக்கி திரும்பப் பெறுகிறது.
இந்த விடயம் தொடர்பில் துருக்கிய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், 'காசாவில் பொதுமக்களுக்கு எதிரான இஸ்ரேலின் தொடர்ச்சியான தாக்குதல்கள் மற்றும் போர் நிறுத்தத்திற்கான அழைப்புகளை இஸ்ரேலின் மறுப்பு ஆகியவற்றால் ஏற்பட்ட மனிதாபிமான சோகத்தை கருத்தில் கொண்டு, தூதரான ஸாகிர் ஒஸ்கான் டொருன்லர் (Sakir Ozkan Torunlar) திரும்ப அழைக்கப்பட்டார்' என கூறப்பட்டுள்ளது.
நெதன்யாகுவுடனான தொடர்பு
இது குறித்து துருக்கி அதிபர் எர்டோகன் கூறும்போது, பிரதமர் நெதன்யாகுவுடனான தொடர்பை முறித்துக் கொள்வதாகவும், ஆனால், இஸ்ரேலுடனான உறவை துண்டித்துக்கொள்வதாக இது அர்த்தப்படுத்துவதில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும், போர் முடிந்ததும், துருக்கி "காசாவை ஒரு சுதந்திர பலஸ்தீனிய அரசின் ஒரு பகுதியாகவும் கிழக்கு ஜெருசலேமை அதன் தலைநகராகவும் கொண்ட அமைதியான பகுதியாக பார்க்க விரும்புகிறது" என்றும் எர்டோகன் குறிப்பிட்டுள்ளார்.