டுவிட்டரின் 'புளூ டிக்' குறியீடு - மாதம் 19.99 அமெரிக்க டொலர்கள் கட்டணம்..! எலான் மஸ்க் அதிரடி
மாற்றம்
டுவிட்டர் நிறுவனம் எலான் மஸ்க்கின் வசம் வந்த நிலையில், போலியான கணக்குகளை நீக்க அதிரடியான மாற்றங்களை கொண்டுவர உள்ளதாக தகவல் வெளியாகியது.
அதன்படி, டுவிட்டரின் கணக்குகளை சரிபார்க்கும் செயல்முறை புதுப்பிக்கப்படும் என்று எலான் மஸ்க் தெரிவித்தார்.
டுவிட்டரில் தற்போது, அரசியல் தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் தங்களின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் கணக்குகளில் புளூ டிக் பயன்படுத்துகின்றனர்.
நீலநிற புளூ டிக் குறியீடு
இந்த டுவிட்டர் கணக்கு அவர்களுடைய அதிகாரப்பூர்வ டுவிட்டர் கணக்கு தான் என்பதை உறுதிபடுத்திக்கொள்ள, டுவிட்டர் தளத்தில் பெயருக்கு அருகில் நீலநிற புளூ டிக் குறியீடு குறிக்கப்பட்டிருக்கும்.
டுவிட்டர் புளூ டிக்கிற்காக பயனர்கள் 4.99 அமெரிக்க டொலர்கள்(ரூ.1,831வரை) செலுத்த வேண்டியிருந்தது.
இதன்மூலம், பயனர்கள் டுவிட்டரில் பல்வேறு அம்சங்களை பயன்படுத்திக்கொள்ளலாம்.
தாங்கள் பதிவிட்ட பதிவுகளை எடிட் செய்யும் வசதியும் அறிமுகப்படுத்தப்பட்டது.
மாதம்தோறும் 19.99 அமெரிக்க டொலர்கள்
இந்த நிலையில், அதிகாரப்பூர்வ கணக்கு என்பதை உறுதிபடுத்தும் புளூ டிக்கிற்காக பயனாளர்களிடம் மாதம்தோறும் ரூ.7335.85 வரை(19.99 அமெரிக்க டொலர்கள்) கட்டணம் வசூலிக்க டுவிட்டர் நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தெரிகிறது.
இந்த அறிவிப்பு வெளியான 90 நாட்களுக்குள் கட்டணம் செலுத்தவில்லையெனில், பயனாளர்கள் பெயருக்கு அருகில் உள்ள நீலநிற புளூ டிக் குறியீட்டை பறிக்கும் வகையில் மாற்றம் கொண்டுவரப்பட உள்ளது.