உக்ரைன் -ரஷ்யா மோதல் - டுவிட்டர் நிறுவனம் எடுத்துள்ள தீர்மானம்
உக்ரைன் மற்றும் ரஷ்யாவில் விளம்பரங்கள் இரத்து செய்யப்படுவதாக டுவிட்டர் நிறுவனம் அறிவித்துள்ளது.
உக்ரைன் மீது கடந்த வியாழக்கிழமை போரை தொடங்கிய ரஷ்யா, தொடர்ந்து மூர்க்கத்தனமான தாக்குதல்களை நடத்தி வருகிறது. இந்த போர் உலகம் முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.
சமூக வலைத்தளங்கான டுவிட்டர், பேஸ்புக் போன்றவற்றில் உக்ரைன்-ரஷ்யா போர் தொடர்பான வீடியோக்கள், புகைப்படங்கள் மற்றும் கள நிலவரங்கள் பகிரப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் பொதுபாதுகாப்பு தகவல்களுக்கு முன்னுரிமை அளிக்கும் விதமாக உக்ரைன் மற்றும் ரஷ்யாவில் டுவிட்டர் தளத்தில் விளம்பரங்கள் தற்காலிகமாக இரத்து செய்யப்படுவதாக டுவிட்டர் நிறுவனம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “முக்கியமான பொதுப் பாதுகாப்பு தகவல்கள் உயர்த்தப்படுவதையும், விளம்பரங்கள் அவற்றை திசை திருப்பாமல் இருப்பதையும் உறுதிசெய்ய உக்ரைன் மற்றும் ரஷ்யாவில் விளம்பரங்களை தற்காலிகமாக இடைநிறுத்துகிறோம்” என கூறப்பட்டுள்ளது.
இதனிடையே ரஷ்யாவை தலைமையிடமாக கொண்டு இயங்கும் செய்தி நிறுவனங்கள் போர் தொடர்பாக தவறான தகவல்களை பரப்புவதை தடுக்கும் விதமாக அந்த நிறுவனங்கள் பேஸ்புக்கை பயன்படுத்துவதில் பேஸ்புக் நிறுவனம் பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
