2 கிலோ கேரள கஞ்சாவுடன் விசேட அதிரடிப்படையினரால் இருவர் கைது
அம்பாறையிலிருந்து காத்தான்குடிக்கு கஞ்சா கடத்திய இருவரை விசேட அதிரடிப்படையினர் நேற்று கைது செய்துள்ளனர்.
அம்பாறை மருதமுனை கடற்கரை பிரதேசத்தில் இருந்து மட்டக்களப்பு காத்தான்குடி பிரதேசத்துக்கு மோட்டர் சைக்கிள் ஒன்றில் 2 கிலோ கேரள கஞ்சா கடத்தி சென்ற போதே மருதமுனையில் வைத்து குறித்த இரு நபர்களும் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
களுவாஞ்சிக்குடி விசேட அதிரடிப்படைக்கு கிடைத்த இரகசியத் தகவலுக்கமைய சம்பவதினமான சனிக்கிழமை மாலை விசேட அதிரடிப்படையினர் காவல்துறையினருடன் இணைந்து மருதமுனை கடற்கரைப்பகுதியை சுற்றிவளைத்து சோதனையிட்டனர்.
இதன் போது மோட்டார் சைக்கிளில் கஞ்சாவுடன் பயணம் செய்த இருவரை விசேட அதிரடிப்படையினர் மடக்கி பிடித்து கைது செய்ததுடன் அவர்களிடமிருந்து 2 கிலோ கேரள கஞ்சா மற்றும் 13,500 ரூபா பணத்துடன் மோட்டார் சைக்கிள் ஒன்றையும் மீட்டனர்.
இதில் கைது செய்யப்பட்டவர்கள் சம்மாந்துறை இஸ்மாயீல் புரத்தை சேர்ந்த 40 வயதுடையவரும், மருதமுனை பீச் வீதியைச் சேர்ந்த 56 வயதுடையவர் எனவும் தெரிய வந்துள்ளது.
இவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட 2 கிலோ கஞ்சா பணம் மற்றும் மோட்டர் சைக்கிள் என்பன காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளதாக தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பெரிய நீலாவணை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
