வவுனியாவில் துப்பாக்கி ரவைகளுடன் இருவர் அதிரடியாக கைது
கொழும்பில் (Colombo) கைது செய்யப்பட்ட விடுதலைப்புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர் வழங்கிய தகவலின்படி வவுனியா, நேரியகுளம் பகுதியில் வீடு ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 728 துப்பாக்கி ரவைகள் மீட்கப்பட்டுள்ளதுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த கைது நடவடிக்கை நேற்று முன்தினம் (02) முன்னெடுக்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
கடந்த 21 ஆம் திகதி கொழும்பில் துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்ட விடுதலைப்புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர் வழங்கிய தகவலின் அடிப்படையில் கொழும்பிலிருந்து வருகை தந்த புலனாய்வுத்துறை அதிகாரிகளோடு வவுனியா மாவட்ட குற்றத்தடுப்பு விசாரணை பிரிவு காவல்துறையினரும் இணைந்து செட்டிகுளம் துட்டுவாகை மற்றும் நேரியகுளம் பகுதிகளில் உள்ள இரு வீடுகளில் சோதனையை மேற்கொண்டனர்.
இதுவரை 6 பேர் கைது
இதன்போது, நேரியகுளத்தில் வீடு ஒன்றின் அருகாமையில் பிளாஸ்டிக் பரல் ஒன்றினுள் 86 கைக்குண்டுகள் ரி56 ரக துப்பாக்கிக்கான ரவைகள், கைத்துப்பாக்கிக்கான மூன்று ரவைகள், 5600 போதை மாத்திரைகள், 10 கிராம் ஐஸ் போதைப்பொருள் என்பன நிலத்தின் கீழ் பதுக்கி வைக்கப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்டன.
இந்தநிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் மூவர் கைது செய்யப்பட்டிருந்தனர்.
அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் செட்டிகுளம், நேரியகுளம் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 728 துப்பாக்கி ரவைகள் மீட்கப்பட்டதுடன் செட்டிகுளம் பிரதேச சபை உறுப்பினரின் சகோதரர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் இதுவரை 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 7ஆம் நாள் மாலை - திருவிழா
