மட்டக்களப்பில் போதைப் பொருட்களுடன் சிக்கிய இருவர்
மட்டக்களப்பு - காத்தான்குடி பிரதேசத்தில் 14, 570 மில்லி கிராம் ஐஸ் போதைப் பொருட்களுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காத்தான்குடி காவல் நிலைய பொறுப்பதிகாரி ஜி. கஜநாயக்கா தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு மாவட்ட குற்ற விசாரணை பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து இன்று (30) அதிகாலை 5 மணியளவில் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இருவர் கைது
காத்தான்குடி பிரதேசத்தில் மோட்டார் சைக்கிளின் கீழ்ப்பகுதியில் மறைத்து வைத்து மேற்படி ஐஸ் போதைப் பொருள் எடுத்துவரப்பட்ட நிலையில் குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்போது, காத்தான்குடி மையவாடி வீதி மற்றும் காத்தான்குடி ஆறாம் குறிச்சி பிரதேசங்களை சேர்ந்த நபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் பிரபல மென்பான நிறுவனம் ஒன்றின் காத்தான்குடி பிரதேச முகவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலதிக விசாரணை
சந்தேகநபர்களிடமிருந்து ஐஸ் போதைப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளதுடன் கடத்தலுக்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிளும் கைப்பற்றப்பட்டுள்ளது.
இந்நிலையில், சந்தேக நபர்கள் மட்டக்களப்பு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாகவும் சம்பவம் தொடர்பில் காத்தான்குடி காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை நடத்தி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |