கடும் மழையினால் வீட்டின்மீது சரிந்த மண்மேடு - ஒரே குடும்பத்தை சேர்ந்த இரண்டு சிறுவர்கள் பலி..!
கண்டி, துனுவில கணபதிவத்த பிரதேசத்தில் இன்று (25) காலை பெய்த கடும் மழையின் போது வீடொன்றின் மீது மண் மேடு சரிந்து விழுந்ததில் இரண்டு சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர்.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 18 வயதுடைய ஆயிஷா நிஷானி விதாரண மற்றும் 16 வயதுடைய சித்தும் சாரங்க விதாரண ஆகிய இரு பிள்ளைகளே உயிரிழந்துள்ளனர்.
விபத்தின் போது வீட்டில் தாய், தந்தை மற்றும் மூன்று பிள்ளைகள் இருந்துள்ளனர். காயமடைந்த தாய், தந்தை மற்றும் 12 வயது சிறுமியை வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மீட்புப்பணி
இராணுவம், காவல்துறை மற்றும் பிரதேசவாசிகளின் கூட்டு முயற்சியின் பின்னர் மண்ணில் சிக்கிய சிறுவர்கள் மற்றும் குடும்பத்தினரை மீட்டுள்ளனர்.
குறித்த மீட்புப்பணியின் போது இரண்டு சிறுவர்களும் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பாக கருத்து தெரிவித்த கிராமத்தினர் ஒருவர்,
“உள்ளூர்வாசிகள் அனைவரும் சேர்ந்து மண்ணை இழுத்தோம். மூன்று சிறுவர்களும் புதைந்திருந்தனர். முதலில் ஒரு குழந்தை மீட்டெடுத்தோம். அவர் உயிருடன் இருந்தார்.
உயிரிழந்த நிலையில்
அவர் சுயநினைவுடன் இருந்தார். நாங்கள் அவரை மருத்துவமனைக்கு அனுப்பினோம். நாங்கள் இவர்களை மீட்டெடுக்கும்போது, மூன்றாவது குழந்தையைப் பெறுவதற்கு சுமார் 4 மணி நேரம் ஆனது.
நாங்கள் மிக நீண்டநேரம் மண்ணை வெட்டி வெளியே எடுக்க வேண்டியிருந்தது. பின்னர் அவர் உயிரிழந்த நிலையில் மீட்க்கப்பட்டார்.”என தெரிவித்திருந்தார்.