வெளிநாடுகளில் இருந்து சிகரெட் கடத்தல்: கட்டுநாயக்கவில் சிக்கிய தொழிலதிபர்கள்
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இரு தொழிலதிபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மலேசியா மற்றும் டுபாயில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்குச் சட்டவிரோதமான முறையில் கொண்டு வரப்பட்ட வெளிநாட்டு தயாரிப்புச் சிகரெட்டுகளை வெளியே கடத்த முயன்ற குற்றச்சாட்டில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
காவல்துறை போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரால் (PNB) குறித்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
சந்தைப் பெறுமதி
இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், கைப்பற்றப்பட்ட வெளிநாட்டுச் சிகரெட்டுகளின் சந்தைப் பெறுமதி சுமார் 6.75 மில்லியன் ரூபாய் (67.5 லட்சம் ரூபாய்) என மதிப்பிடப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் 37 வயதான சீனத் தொழிலதிபர் என தெரிவிக்கப்படுகின்றது.

இவர் மலேசியாவின் கோலாலம்பூரிலிருந்து எயர் ஆசியா (AirAsia) சேவைக்குச் சொந்தமான AK 047 என்ற விமானம் மூலம் இரவு 10.45 மணிக்குக் கட்டுநாயக்கவை வந்தடைந்துள்ளார்.
இவரது பயணப் பைகளில் நுட்பமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த பல்வேறு சீனப் பிராண்டுகளைச் சேர்ந்த 15,000 சிகரெட்டுகளைக் கொண்ட 75 சிகரெட் பெட்டிகள் (Cartons) கைப்பற்றப்பட்டுள்ளன.
போதைப்பொருள்
மற்றைய சந்தேகநபர் கொழும்பு கொலன்னாவ பகுதியைச் சேர்ந்த 24 வயதான தொழிலதிபர் என தெரிவிக்கப்படுகின்றது.
இவர் டுபாயிலிருந்து ஃபிளைடுபாய் (flydubai) சேவையின் FZ 549 என்ற விமானம் மூலம் இரவு 8.20 மணிக்கு இலங்கையை வந்தடைந்துள்ளார்.

இவர் கொண்டு வந்த மூன்று பயணப் பைகளுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 30,000 சிகரெட்டுகளைக் கொண்ட 150 வெளிநாட்டுச் சிகரெட் பெட்டிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட இரு சந்தேகநபர்களும் காவல்துறை பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதுடன் அவர்களை நாளை (27-10-2026) நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை காவல்துறை போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |