திலினி பிரியமாலியுடன் தொடர்பு - இரண்டு பிரபல நடிகைகள் தலைமறைவு
பல ஆயிரம் கோடி ரூபாய் மோசடியில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள திலினி பிரியமாலியுடன் நெருங்கிய தொடர்பில் இருந்த பிரபல நடிகைகள் இருவர் விசாரணைக்கு அழைக்கப்பட்ட பின்னர் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் (சிஐடி) ஆஜராகாமல் தவிர்ப்பதாக கூறப்படுகிறது.
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் விசாரணைகளைத் தவிர்ப்பதற்கு பல்வேறு காரணங்களைச் சொல்லி அவர்கள் வருகை தராமல் இருக்க முயற்சிப்பதாக சிரேஷ்ட காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
மற்றுமொரு நடிகையிடம் வாக்குமூலம்
நீதிமன்றத்திற்கு உண்மைகளை தெரிவிப்பதாகவும், காவல்துறையினரைத் தவிர்க்கும் நபர்கள் தொடர்பில் தேவையான நடவடிக்கைகளை எடுப்பதாகவும் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இவர்கள் திலினி பிரியமாலியுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்ததாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இதேவேளை, திலினி பிரியமாலி தொடர்பான விசாரணை தொடர்பில் திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நடிகை செமினி இட்டமல்கொடவிடம் குற்றப் புலனாய்வு திணைக்களம் நேற்று (30) வாக்குமூலம் பதிவு செய்துள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் நிஹால் தல்துவா தெரிவித்தார்.
திலினியின் வியாபாரத்தில் தான் எந்த பணத்தையும் முதலீடு செய்யவில்லை என்றும், தன்னிடம் இருந்து யாரும் பணம் வாங்கவில்லை என்றும், மிரட்டல்களில் ஈடுபடவில்லை என்றும் இட்டமல்கொட தெரிவித்துள்ளார்.
நீதிமன்றின் உத்தரவு
இதேவேளை திலினி பிரியமாலியை எதிர்வரும் 24 ஆம் திகதி சிறைச்சாலைகள் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு கொழும்பு மேலதிக மாவட்ட நீதிவான் சந்தன ஏக்கநாயக்க இன்று உத்தரவிட்டுள்ளார்.
கையடக்கத் தொலைபேசிகளை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டின் விசாரணைக்காக அவர் மீண்டும் முற்படுத்தப்பட்டபோது நீதிவான் மேற்கண்ட உத்தரவை பிறப்பித்தார்.
நிதி மோசடி குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட திலினி பிரியமாலி நீதிமன்ற உத்தரவில் தொடர்ச்சியாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
