கட்டுநாயக்க விமான நிலையத்தில் இந்திய பெண் அதிரடி கைது!
கட்டுநாயக்க விமான நிலையத்தில் ரூ.65 மில்லியனுக்கும் அதிக பெறுமதியுடைய கோகைன் போதைப்பொருளுடன் இந்திய பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த கைது நடவடிக்கையானது, கட்டுநாயக்க விமான நிலைய காவல்துறை போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் அதிகாரிகளால் இன்று (06) மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சந்தேக நபரான பெண் இந்தியாவின் மிசோரமைச் சேர்ந்த 29 வயது சமையல்காரர் என்று கூறப்படுகிறது.
முதற்கட்ட விசாரணை
அத்துடன், கடவுச்சீட்டுக்களை பயன்படுத்தி நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில், அவர் இதற்கு முன்பு மூன்று முறை நாட்டிற்கு வருகை தந்திருப்பது தெரியவந்துள்ளது.
இந்த நிலையில், சந்தேக நபரான பெண் இந்தியாவின் சென்னையில் இருந்து அதிகாலையில் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
காவல்துறை போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் அதிகாரிகளுக்குக் கிடைத்த புலனாய்வுத் தகவலின் அடிப்படையில் இந்தக் கைது மேற்கொள்ளப்பட்டதாகவும், மேலும் அவர் கொண்டு வந்த சூட்கேஸின் அடிப்பகுதியில் பொலிதீன் பொதிகளில் சுற்றப்பட்டு 1 கிலோகிராம் 644 கிராம் கோகோயின் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது.
மற்றொருவர் கைது
இதேவேளை, கைது செய்யப்பட்ட சந்தேக நபர் அளித்த தகவலின் அடிப்படையில் போதைப்பொருள் கையிருப்பை ஏற்கத் தயாராக இருந்த உள்ளூர் நபர் ஒருவர், இன்று பிற்பகல் 1.30 மணியளவில் கொழும்பின் கொள்ளுப்பிட்டி பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு அருகில் தங்குவதற்காகத் தயார் நிலையில் காத்திருந்தபோது, கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேகநபர் மாலபே பகுதியில் வசிக்கும் 50 வயதுடைய வர்த்தகர் என்றும் தெரியவந்துள்ளது.
இந்த நிலையில், கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேக நபர்களும் நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டு மேலதிக விசாரணைக்காக தடுத்து வைக்கப்படுவார்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
