ரூபா ஐந்து கோடி பணத்துடன் பெண் உட்பட இருவர் கைது
போதைப்பொருள் கடத்தல் மூலம் சம்பாதித்த 5 கோடி ரூபாவுக்கும் அதிகமான பணத்துடன் பெண் ஒருவர் உட்பட இருவர் பண்டாரகம பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
வங்கிக் கணக்குகள் மற்றும் போதைப்பொருள் தொடர்பான பிற பரிவர்த்தனைகளைப் பயன்படுத்தி போதைப்பொருள் கடத்தல் மூலம் சம்பாதித்த பணத்தை மாற்றியமை குறித்து காவல்துறை போதைப்பொருள் தடுப்புப் பிரிவு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
வங்கி கணக்கில் பணம் வைப்பில்
அதன்படி, பண்டாரகம பகுதியில் உள்ள வங்கிக் கணக்கில் பணம் வரவு வைக்கப்படுவதாகவும், பல்வேறு பகுதிகளில் உள்ள ஏடிஎம் இயந்திரங்களில் இருந்து விரைவாக பணம் எடுக்கப்படுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
அந்தந்த கணக்கு வைத்திருப்பவர் குறித்த தகவல்களை தேடியபோது, போலி முகவரியை பயன்படுத்தி கணக்கு தொடங்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
பண்டாரகம தனியார் வங்கியொன்றுக்கு பணம் பெற்றுக் கொள்வதற்காக வந்த சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
வீட்டில் கிடந்த கோடிக்கணக்கான பணம்
விசாரணைகளின் போது சந்தேகநபரின் வீட்டில் 500,000,190 ரூபா பணம் காணப்பட்டதாக காவல்துறை தலைமையகம் தெரிவித்துள்ளது. இது போதைப்பொருள் வர்த்தகம் நடத்தும் நபருக்கு சொந்தமான பணம் என தெரியவந்துள்ளதுடன், அதற்கு உறுதுணையாக இருந்த முக்கிய கடத்தல்காரரின் தாயாரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட இருவரையும் பாணந்துறை நீதவான் நீதிமன்றில் முற்படுத்தியதன் பின்னர் தடுப்புக்காவல் உத்தரவு பெற்றுக்கொள்ளப்பட்டதாக காவல்துறை தலைமையகம் மேலும் தெரிவித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |