பேரிடருக்கு மத்தியில் தொழிலதிபரை தாக்கி கொள்ளையிட்ட காவல்துறை அதிகாரிகள் கைது
கடுவெல காவல்துறையில் பணியாற்றும் இரண்டு காவல்துறை கான்ஸ்டபிள்கள் உட்பட நான்கு பேர் நேற்று (3) இரவு கைது செய்யப்பட்டதாக கடுவெல காவல்துறை தெரிவித்துள்ளது.
கிராமத்திற்குச் செல்ல பேருந்து இல்லாததால் கடுவெல நகரில் உள்ள ஒரு விடுதியில் அறையொன்றில் தங்கியிருந்த தொழிலதிபர் ஒருவரைத் தாக்கி பணம் மற்றும் தங்க மோதிரத்தை கொள்ளையடித்த சம்பவம் தொடர்பாக இந்தக் குழு கைது செய்யப்பட்டுள்ளது.
இரண்டு காவல்துறையினர் உட்பட நால்வர் கைது
கைது செய்யப்பட்ட சந்தேக நபரில் விடுதியின் முகாமையாளர் மற்றும் ஊழியர் ஒருவரும் அடங்குவதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

கம்புருபிட்டிய பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர், தனது குழந்தையைப் பார்க்க பியகம பகுதிக்கு வந்து, பேருந்து இல்லாததால் வீடு திரும்புவதற்காக கடுவெல நகரத்திற்கு வந்து, அரச வங்கிக்கு அருகிலுள்ள விடுதிக்குச் சென்று ஒரு அறையை வாடகைக்கு எடுத்து தங்கியிருந்தார்.
சோதனையிடவுள்ளதாகத் தெரிவித்து கொள்ளை
அந்த நேரத்தில் நான்கு சந்தேக நபர்களும் விடுதியின் உரிமையாளருடன் மது அருந்திக் கொண்டிருந்ததாகவும், இரண்டு கான்ஸ்டபிள்களும் தொழிலதிபர் தங்கியிருந்த அறையின் கதவைத் தட்டி, கதவை வலுக்கட்டாயமாகத் திறந்து, அவரை சோதனையிட விரும்புவதாக தெரிவித்ததாக தொழிலதிபரின் முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முறைப்பாடு அளித்த தொழிலதிபர், தான் அணிந்திருந்த தங்க மோதிரத்தையும், தனது பணப்பையில் இருந்த ரூ.48,000-ஐயும் கொள்ளையடித்துச் சென்றதாகவும், மிகவும் சிரமப்பட்டு சம்பவ இடத்திலிருந்து தப்பித்து அருகிலுள்ள உணவகத்திற்கு ஓடி தனது உயிரைக் காப்பாற்றிக் கொண்டதாகவும் காவல்துறையிடம் தெரிவித்தார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |