ஹோர்முஸ் நீரிணையில் மேலும் இரண்டு பாரிய எண்ணெய் கப்பல்கள் கண்ணிவெடிகளில் சிக்கின
ஹோர்முஸ் நீரிணையில், தங்களுக்கு வழங்கப்பட்ட அறிவுறுத்தல்களை மீறி, அங்கீகரிக்கப்படாத பாதைகள் வழியாகச் செல்ல முயன்ற இரண்டு பிரம்மாண்ட எண்ணெய் ராங்கர் கப்பல்கள், கடல் கண்ணிவெடிகளில் சிக்கிச் செயலிழந்ததாக இஸ்லாமிய புரட்சிப் படைப்பிரிவின் (IRGC) கடற்படை அறிவித்துள்ளது.
ஞாயிற்றுக்கிழமை(22.11) இரவு வெளியிடப்பட்ட அறிக்கையில், இந்த இரண்டு கப்பல்களும் இஸ்லாமிய புரட்சிப் படைப்பிரிவின் கடற்படை வழங்கிய அறிவுறுத்தல்களைப் பின்பற்றாமல், அப்பகுதியில் அனுமதிக்கப்படாத பாதைகளைப் பயன்படுத்தி ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க முயன்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டு வெவ்வேறு இடங்களில் சம்பவம்
கானம் (Ghanam) தீவுக்கு வடக்கேயும், ஹோர்முஸ் நீரிணைக்குக் கிழக்கேயும் வெவ்வேறு இடங்களில், இந்தக் கப்பல்கள் கடல் கண்ணிவெடிகளில் மோதி வெடிப்புக்குள்ளானதாகவும், இதனால் அவை நகர முடியாமல் நின்ற இடத்திலேயே முடங்கிவிட்டன என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஹோர்முஸ் நீரிணை முழுமையாகத் தங்கள் கடற்படையின் கட்டுப்பாட்டிலும் கண்காணிப்பிலும் இருப்பதாக, டேங்கர் கப்பல் உரிமையாளர்கள், வணிக நிறுவனங்கள் மற்றும் கப்பல் போக்குவரத்து நிறுவனங்களுக்கு இஸ்லாமிய புரட்சிப் படைப்பிரிவின் கடற்படை எச்சரிக்கை விடுத்துள்ளது.
கப்பல் உரிமையாளர்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை
"அமெரிக்க மத்திய கட்டளைத் தளத்தின் (CENTCOM) தளபதிகள் போன்ற கடத்தல்காரர்களை" நம்பியிருப்பது, கப்பல் உரிமையாளர்களுக்கும் வணிக நிறுவனங்களுக்கும் பெரும் நிதி இழப்பையும், திவாலாகும் நிலையையுமே ஏற்படுத்தும் என்று அது கூறியுள்ளது.

கப்பல் உரிமையாளர்களும் கப்டன்களும், தங்கள் கடற்படை அதிகாரிகள் வழங்கும் அறிவுறுத்தல்களையும் எச்சரிக்கைகளையும் தீவிரமாகக் கருத்தில் கொள்ள வேண்டும் என்றும், அங்கீகரிக்கப்படாத பாதைகளில் செல்வதையோ அல்லது அறிவிக்கப்பட்ட விதிமுறைகளுக்கு முரணான செயல்களில் ஈடுபடுவதையோ தவிர்க்க வேண்டும் என்றும் இஸ்லாமிய புரட்சிப் படைப்பிரிவின் கடற்படை மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |