பிரிட்டன் அதிரடி - ரஷ்ய நாடாளுமன்ற கீழ்சபை உறுப்பினர்களுக்கு தடை
ரஷ்ய அரச தலைவர் விளாடிமிர் புடினின் உக்ரைன் ஆக்கிரமிப்பிற்கு ஆதரவு வழங்கும் ரஷ்ய நாடாளுமன்றத்தின் கீழ் சபை உறுப்பினர்கள் 386 பேர் மீது தடை விதிக்கப்பட்டுள்ளதாக பிரித்தானிய வௌிவிவகார அமைச்சர் Liz Truss தெரிவித்துள்ளார்.
இதன்படி கீழ் சபை உறுப்பினர்கள் 386 பேருக்கும் பிரித்தானியாவிற்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், பிரித்தானியாவிலுள்ள அவர்களது சொத்துக்களைக் கையாளவும், அங்கு வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
உக்ரைனை சட்டவிரோதமாக ஆக்கிரமிக்க ரஷ்ய அரச தலைவருக்கு உடந்தையாகவுள்ளவர்களையே தாம் இலக்கு வைப்பதாக பிரித்தானிய வௌிவிவகார அமைச்சர் Liz Truss கூறியுள்ளார்.
தடைகளினூடாக ரஷ்ய பொருளாதாரத்தை கடினமாக்கும் செயற்பாடுகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுமெனவும், ரஷ்யா மீதான அழுத்தங்களை தளர்த்தப்போவதில்லையெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனையடுத்து, பிரித்தானியாவினால் தடை விதிக்கப்பட்ட ரஷ்ய நாடாளுமன்றத்தின் கீழ் சபை உறுப்பினர்களின் எண்ணிக்கை 400 ஆக அதிகரித்துள்ளது.
