ஐ.எம்.எப் ஒப்பந்தம் : அரசியல் கட்சிகளிடம் பிரித்தானிய உயர்ஸ்தானிகர் முன்வைத்த கோரிக்கை!
இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் ஒப்பந்தத்தை, நாட்டில் உள்ள முக்கிய அரசியல் கட்சிகள் அங்கீகரிக்க வேண்டுமென இலங்கைக்கான பிரித்தானியாவின் உயர்ஸ்தானிகர் அன்ட்ரூ பற்றிக் வலியுறுத்தியுள்ளார்.
இலங்கையின் மூன்று பிரதான அரசியல் கட்சிகள் உள்ளிட்ட ஏனைய அரசியல் கட்சிகள் குறித்த ஒப்பந்தம் தொடர்பில் எதிர்ப்பு வெளியிட்டுள்ள பின்னணியிலேயே, அவர் இதனை தெரிவித்துள்ளார்.
விமர்சனங்கள்
சர்வதேச நாணய நிதியத்துடன் அரசாங்கம் ஒப்பந்தமொன்றை மேற்கொண்டுள்ளமை குறித்து பல விமர்சனங்களும் எதிர்ப்புக்களும் முன்வைக்கப்பட்டு வருகின்றமை தொடர்பில் தான் அறிந்திருப்பதாக அன்ட்ரூ பற்றிக் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் இந்த ஆண்டு தேர்தல்கள் நடைபெறவுள்ள நிலையில், இதில் வேட்பாளராக களமிறங்குபவர்கள் நிதியத்துடனான ஒப்பந்தத்தை நீக்க நடவடிக்கை எடுக்கக்கூடுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், குறித்த ஒப்பந்தம் தொடர்பான புதிய பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பது தொடர்பான முன்மொழிவுகளை குறித்த தரப்பினர் முன்வைக்கக்கூடுமெனவும் அவர் எச்சரித்துள்ளார்.
இலங்கையின் நிலை
மேலும், சில அரசியல்வாதிகள் சர்வதேச நாணய நிதியத்தின் உதவியின்றி இலங்கையின் நிலையை மேம்படுத்த முடியுமென கூறுவதாகவும் அன்ட்ரூ பற்றிக் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த நிலையில், நிதியத்துடனான ஒப்பந்தம் தொடர்பில் இலங்கையில் உள்ள அரசியல் கட்சிகள் ஆராய்ந்து பார்க்க வேண்டுமெனவும் இந்த ஒப்பந்தத்தை அங்கீகரிக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இதேவேளை, சர்வதேச நாணய நிதியத்தின் மற்றும் பாரிய கடன் வழங்கும் நாடுகளின் அமைப்பான பாரிஸ் கிளப்பில் பிரித்தானியா அங்கம் வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |