அமெரிக்காவிற்கு செல்லவுள்ள பிரித்தானியர்களுக்கு அவசர எச்சரிக்கை
அமெரிக்காவிற்கு (United States) பயணம் மேற்கொள்ளும் குடிமக்களுக்கான எச்சரிக்கைகளை பிரித்தானிய (United Kingdom) அரசாங்கம் திருத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதனடிப்படையில், அமெரிக்க அரசாங்கத்தின் நுழைவு விதிகளை மீறும் எவரும் கைது அல்லது தடுப்புக்காவலை எதிர்கொள்ள நேரிடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஜனவரி 20 ஆம் திகதி பதவியேற்றதிலிருந்து, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump), கடுமையான எல்லைக் கொள்கையில் கவனம் செலுத்தும் குடியேற்றம் தொடர்பான பல நிர்வாக ஆணைகளை அறிவித்துள்ளார்.
ஆவணமற்ற குடியேறிகள்
அத்தோடு, அமெரிக்காவில் ஆவணமற்ற குடியேறிகள் மீதான கடுமையான நடவடிக்கை மற்றும் விசா சரிபார்ப்பு நடைமுறைகளையும் தீவிரப்படுத்தியுள்ளார்.
சமீபத்தில் அமெரிக்க எல்லையில் பல ஜேர்மன் மக்கள் தடுத்து வைக்கப்பட்டதை அடுத்து, விசா அல்லது நுழைவு விலக்கு என்பது அந்த நாட்டுக்கான நுழைவுக்கு உத்தரவாதம் அளிக்காது என்பதை வலியுறுத்தும் வகையில் புதன்கிழமை ஜேர்மனி தனது அமெரிக்க பயண எச்சரிக்கைகளை புதுப்பித்தது.
இந்தநிலையில், தற்போது பிரித்தானிய வெளிவிவகார அமைச்சரகமும் அமெரிக்கா தொடர்பில் தங்கள் குடிமக்களுக்கு பயண எச்சரிக்கை விடுத்துள்ளது.
பிரித்தானிய மக்கள்
பிரித்தானிய மக்கள் அனைத்து நுழைவு, விசா மற்றும் பிற நுழைவு நிபந்தனைகளுக்கும் இணங்க வேண்டும் எனவும், அமெரிக்க அதிகாரிகள் நுழைவு விதிகளை கண்டிப்புடன் நடைமுறைப்படுத்தப்படுகின்றார்கள் எனவும், இதனால் பிரித்தானிய மக்கள் விதிகளை மீறினால் கைது செய்யப்படலாம் அல்லது காவலில் வைக்கப்படலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளனர்.
அத்தோடு, இந்தத் திருத்தத்திற்கான காரணம் குறித்து கருத்து தெரிவிக்கவோ அல்லது அது எப்போது முதல் நடைமுறைக்கு வந்தது என்பதை உறுதிப்படுத்தவோ வெளிவிவகார அலுவலகம் மறுத்து விட்டது.
இது மட்டமன்றி, பயணம் மேற்கொள்ளும் மக்கள் முடிவுகளை எடுக்க உதவும் வகையில் தங்கள் ஆலோசனைகள் வடிவமைக்கப்பட்டுள்ளது என்றும் தகவல்கள் தொடர்ந்து மதிப்பாய்வு செய்யப்பட்டு வருவதையும் வெளிவிவகார அலுவலகம் சுட்டிக்காட்டியுள்ளது.
இந்த மாத தொடக்கத்தில், பெண் ஒருவர் தனது விசா நிபந்தனைகளை மீறியதாக எல்லையில் பத்து நாட்களுக்கும் மேலாக தடுத்து வைக்கப்பட்டதாக வெளியான தகவலை அடுத்து, அவரை மீட்க உரிய நடவடிக்கைகள் எடுத்து வருவதாக வெளிவிவகார அலுவலகம் உறுதி அளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


நெருக்கடி நிலைமைகளும் மலையகத் தமிழர்களும்
2 வாரங்கள் முன்