இலங்கையின் மனித உரிமைகளை மீறுபவர்களுக்கெதிராக தடை: பிரித்தானியா வெளியிட்டுள்ள அறிவிப்பு
இலங்கையின் (Sri lanka) மனித உரிமைகள் மீறல்களுடன் தொடர்புபட்டவர்களுக்கு எதிராகப் பொருளாதாரத் தடை பயன்படுத்தப்படும் என்று பிரித்தானியா அறிவித்துள்ளது.
இலங்கையில் போர்க்குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளவர்களுக்கு எதிராக எதிர்காலத்தில் பிரித்தானியாவினால் (UK) பொருளாதாரத் தடை விதிக்கப்படும் சாத்தியம் இருக்கிறதா? என்று நாடாளுமன்ற உறுப்பினர் உமா குமாரன் (Uma Kumaran) கேள்வி எழுப்பியிருந்தார்.
அந்த கேள்விக்கு பதில் வழங்கிய போதே பிரித்தானிய வெளிவிவகார மற்றும் பொதுநலவாய விவகார செயலாளர் கெதரின் வெஸ்ட், இந்த விடயத்தைக் குறிப்பிட்டார்.
மனித உரிமைகள் மீறல்
இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், “இலங்கையானது, மனித உரிமைகள் விடயத்தில் பிரித்தானியா முக்கியத்துவம் வழங்கும் நாடாக இருக்கிறது.
பிரித்தானியாவின் வெளிநாட்டுக் கொள்கைகளின் அடிப்படையில், பொருளாதாரத் தடையை ஏற்படுத்துவதன் ஊடாக ஒருநாட்டின் மனித உரிமைகள் உள்ளிட்ட நிலவரங்களில் முன்னேற்றம் ஏற்படுமாக இருந்தால் அதனை ஒரு கருவியாகப் பயன்படுத்த முடியும்.
ஆனால் எதிர்காலத்தில் இலங்கையர்களில் குறிப்பிட்ட சிலருக்கு எதிராக இப்பொருளாதாரத் தடையைப் பயன்படுத்த முடியுமா என்று அனுமானத்தின் அடிப்படையில் பதில்களை வழங்க முடியாது. அவ்வாறு செய்வதனால் இது பாதகமான சூழ்நிலையை ஏற்படுத்திவிடக்கூடும்” என்றார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |