பிரித்தானிய ஆட்சி மாற்றம் - பொறிஸ் ஜோன்சனின் இறுதி நொடிகள்
பிரித்தானியாவின் புதிய பிரதமராக லிஸ் ட்ரஸ் இன்று பதவியேற்கும் நிலையில், பிரதமராக நாட்டு மக்களுக்கான தனது இறுதி உரையை பொறிஸ் ஜோன்சன், இன்று டவுனிங் ஸ்றீட் க்கு முன்னால் இருந்து ஆற்றியிருந்தார்.
கொரோனா பொது முடக்க காலப் பகுதியில் விருந்துபசாரங்களை நடத்தியமை மற்றும் துணை பிரதம கொறடா மீதான பாலியல் குற்றச்சாட்டுக்களை அடுத்து பிரதமர் பதவியில் இருந்து விலக வேண்டும் என்ற அழுத்தங்கள் பொறிஸ் ஜோன்சனுக்கு ஏற்பட்டிருந்தது.
இதனையடுத்து பிரதமர் பதவியில் இருந்து விலகுவதாக பொறிஸ் ஜோன்சன் அறிவித்த பின்னர், புதிய தலைவருக்கான போட்டியில் ரிஷி சுனக்கை தோற்கடித்து, லிஸ் ட்ரஸ் வெற்றிபெற்றிருந்தார்.
புதிய பிரதமர் நியமனம்
இந்த நிலையில் பொறிஸ் ஜோன்சன் மற்றும் லிஸ் ட்ரஸ் ஆகியோர் இன்று ஸ்கொட்லாந்துக்கு சென்று, அங்குள்ள பல்மொறல் கோட்டையில் வைத்து மகாராணி எலிசபெத்தை சந்திக்கின்றனர்.
இதன்போது பிரதமர் பதவியில் இருந்து விலகும் கடிதத்தை பொறிஸ் ஜோன்சன் கையளித்த பின்னர், புதிய பிரதமராக லிஸ் ட்ரஸ்சை மகாராணி நியமனம் செய்கின்றார்.
இதன்மூலம் பிரித்தானியாவின் மூன்றாவது பெண் பிரதமர் என்ற பெருமையை அவர் பெற்றுக்கொண்டுள்ளார்.
இறுதி உரை
இந்த நிலையில் இன்று தனது இறுதி உரையை வழங்கிய பொறிஸ் ஜோன்சன், பிரித்தானியாவிற்கான சேவையை தாம் சிறந்த முறையில் செய்ததாக குறிப்பிட்டதுடன், புதிய பிரதமர் லிஸ் ட்ரஸ்சுடன் தொடர்ந்தும் இணைந்து செயற்படுவேன் எனவும் கூறியுள்ளார்.
புதிய பிரதமரான லிஸ் ட்ரஸ்சிற்கு பின்னால் ஒன்றிணைய வேண்டிய தருணம் வந்துள்ளதாகவும் பொறிஸ் ஜோன்சன் தனது இறுதி உரையில் சுட்டிக்காட்டியுள்ளார்.
தமது நிர்வாகத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட பிரெக்சிட், தடுப்பூசி மருந்து செலுத்துதல், உக்ரைன் போருக்கான பதில் நடவடிக்கைகள் குறித்து பொறிஸ் ஜோன்சன் பெருமிதம் தெரிவித்தார்.
எரிசக்தி செலவீனங்கள் அதிகரிப்பதற்கு ரஷ்ய அதிபர் விளாடிமீர் புட்டீனே காரணம் எனவும் இந்த நெருக்கடியை சமாளிக்க லிஸ் ட்ரஸ் மற்றும் அவரது அரசாங்கம் இயலுமான அனைத்தையும் செய்யும் எனவும் அவர் கூறியுள்ளார்.
