பிரித்தானியா பிரதமரின் அதிரடி முடிவு..! சற்றுமுன்னர் வெளியான அறிவிப்பு
பிரித்தானியாவின் பிரதமராக பொறுப்பேற்று, சுமார் ஏழு வாரங்களில் அந்த பதவியில் இருந்து விலகுவதாக லிஸ் ட்ரஸ் அறிவித்துள்ளார்.
ஆளும் கட்சியின் பல உறுப்பினர்களும் லிஸ் ட்ரஸ் பதவி விலக வேண்டும் என்ற அழுத்தங்களை பிரயோகித்துள்ள நிலையில், அவரின் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பிரித்தானிய வரலாற்றில்
இதன்மூலம் பிரித்தானிய வரலாற்றில் மிகவும் குறைந்த நாட்கள் பிரதமர் பதவியில் இருந்தவராக லிஸ் ட்ரஸ் பதிவாகியுள்ளார்.
பிரித்தானியாவின் ஆளும் கென்சவேட்டிவ் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக மன்னர் சார்லஸ்சிற்கு தெரியப்படுத்தியுள்ளதாக பிரதமர் அலுவலத்திற்கு முன்னால் உரையாற்றிய போது லிஸ் ட்ரஸ் தெரிவித்துள்ளார்.
பாரிய பொருளாதார மற்றும் சர்வதேச ஸ்திரமற்ற நிலைமைக்கு மத்தியில் தாம் நாட்டின் தலைமைத்துவத்தை ஏற்றுக்கொண்டதாக அங்கு கூடியிருந்த செய்தியாளர்கள் மத்தியில் சுட்டிக்காட்டியுள்ளார்.
நீண்டகாலமாக குறைந்த பொருளாதார வளர்ச்சியால் நாடு பின்னடைவை சந்தித்திருந்த நிலையில், அதனை மாற்றுவதற்கான கட்சியின் ஆணையுடன் தாம் தேர்ந்தெடுக்கப்பட்டதாக அவர் கூறியுள்ளார்.
எரிசக்தி கட்டணங்கள் தொடர்பில் தனது அரசாங்கம் நடவடிக்கை எடுத்துடன், தேசிய காப்பீட்டை குறைத்ததாகவும் குறைந்த வரி உயர் வளர்ச்சி பொருளாதாரம் தொடர்பான தொலைநோக்குடன் தாம் செயற்பட்டதாகவும் லிஸ் ட்ரஸ் தெரிவித்துள்ளார்.
நிறைவேற்ற முடியாது போயுள்ளது
தற்போதுள்ள சூழ்நிலையில் கென்சவேட்டிவ் கட்சியினால் வழங்கப்பட்ட ஆணையை தம்மால் நிறைவேற்ற முடியாது போயுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை 1922 செயற்குழுவின் தலைவர் சேர் கிரஹம் பிரடியை சந்தித்து, தலைமைத்துவத்திற்கான தேர்தலை ஒரு வாரத்திற்குள் நடத்துவதற்கு இணக்கம் எட்டப்பட்டு்ளளதாகவும் லிஸ் ட்ரஸ் தெரிவித்துள்ளார்.
நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் தேசிய பாதுகாப்பை பேணுவதற்கும் நிதித் திட்டங்களை முன்னெடுத்து செல்வதற்கும் புதிய தலைமைத்துவம் வழியேற்படுத்தும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கட்சியின் புதிய தலைவர் ஒருவர் தேர்ந்தேடுக்கப்படும் வரை நாட்டின் இடைக்கால பிரதமராக தாம் தொடர்ந்தும் செயற்படுவதாகவும் லிஸ் ட்ரஸ் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் உடனடியாக பொதுத் தேர்தலை நடத்த வேண்டும் என பிரதான எதிர்கட்சியான தொழிற்கட்சித் தலைவர் சேர் கெய்ர் ஸ்ராமெயர் வலியுறுத்தியுள்ளார்.
அத்துடன் லிபரல் ஜனநாயக கட்சி மற்றும் ஸ்கொட்லாந்து தேசிய கட்சி ஆகியவற்றின் தலைவர்களும் பொதுத் தேர்தலுக்கான அழைப்பை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.