பிரித்தானியாவில் புகலிடம் கோருவதை தடுக்க புதிய சட்டமூலம்
ஆங்கில கால்வாய் ஊடாக பிரித்தானியாவுக்குள் நுழையும் - நுழைந்துள்ள புலம்பெயர் மக்களுக்கு எதிராக இனிவரும் நாட்களில் மனித உரிமைகள் சட்டத்தை பயன்படுத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என பிரித்தானிய உள்விவகார செயலாளர் சுயெல்லா பிரேவர்மேன் கூறியுள்ளார்.
கொண்டுவரப்படவுள்ள புதிய சட்டத்தால் பிரித்தானியாவில் தங்கியிருக்கும் சட்டவிரோத குடியேறிகள் வெளியேற்றப்படுவார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.
புதிய பிரேரணை
இது தொடர்பில் மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர், பல மாத விவாதங்களுக்கு பின்னர் இது குறித்த புதிய பிரேரணையானது எதிர்வரும் செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படும்.
பிரித்தானிய மக்கள் போதும் என்ற மனநிலைக்கு வந்துவிட்டனர், இந்த விவகாரம் உடனடியாக தீர்க்கப்பட வேண்டும் என்றே மக்கள் விரும்புகின்றனர்.
இதன்பொருட்டே, நாமும் பிரதமர் ரிஷி சுனக்கும் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு இந்த முடிவை எடுத்துள்ளோம்.
சட்டவிரோதமாக பிரித்தானியாவுக்குள் நுழைந்தால், கைது செய்யப்பட்டு, துரிதமாக வெளியேற்ற நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்.
சிறிய படகுகள் மூலம் சட்டவிரோதமாக பிரித்தானியாவிற்குள் நுழைந்துள்ள புலம்பெயர் மக்கள் இனி தங்குவதற்கு உரிமை கோர முடியாமல் போகும்.
புலம்பெயர் மக்கள்
2022இல் மட்டும் சிறிய படகுகளில் 45,000 புலம்பெயர் மக்கள் பிரித்தானியாவிற்கு வந்துள்ளனர்.
புதிய பிரேரணை நடைமுறைக்கு வந்தால் சட்டவிரோதமாக நுழையும் புலம்பெயர் மக்கள் கைது செய்யப்பட்டு, அடுத்த சில வாரங்களில் பாதுகாப்பான மூன்றாவது நாடு ஒன்றிற்கு அனுப்பி வைக்கப்படுவார்கள்” - என்றார்.
