இனி உதவி இல்லை கை விரித்த அமெரிக்கா...! புதிதாக முளைத்த புத்தர்
இலங்கையின் (Sri lanka) பூர்வீக குடிகளாக தமிழ் மக்கள் காணப்படுகின்ற போதும் அவர்கள் மாற்றான் தாய் பிள்ளைகளாக நடத்தப்படுகிற நிலமையே இந்த நாட்டில் காணப்படுகின்றது.
காலத்திற்கு காலம் திட்டமிட்டு மேற்கொள்ளப்படுகின்ற அடக்கு முறைகள், நில அபகரிப்புக்கள், மரபுரிமைகள் மீது பிரயோகிக்கப்படுகின்ற அழுத்தங்கள் என்று இவை எல்லாவற்றையும் எதிர்கொண்டு வாழவேண்டிய நிலைக்கு தமிழர்கள் தள்ளப்பட்டிருக்கிறார்கள்.
கல்லோயா திட்டம் தொடக்கம் துரித மகாவலி அபிவிருத்தி திட்டம் வரை இந்த நாட்டில் மேற்கொள்ளப்படுகின்ற அபிவிருத்தி செயற்பாடுகளில் பெரும்பான்மை இன மக்களின் நலன்களே அதிகளவில் கருத்தில் எடுக்கப்படுகிறது. இத்தகைய இன ரீதியான புறக்கணிப்புக்கள், ஒடுக்குமுறைகள் போன்றவை தமிழ் இளைஞர்களை ஆயுதம் ஏந்தி போராட வைத்தது.
பல தசாப்பதங்கள் இடம்பெற்ற யுத்தத்தில் இந்த நாடு பல அழிவுகளை சந்தித்தது. இத்தகைய கடந்த காலங்களில் இருந்து பாடங்களை கற்றுக கொள்ளாத பெரும்பான்மை சமூகம் இன்றைக்கும் தமிழர்களை ஒடுக்குகின்ற நோக்கோடு பல கோணங்களில் செயற்பட்டு வருகின்றது.
தமிழ் மக்களுடைய பூர்வீக நிலங்கள் மற்றும் அவற்றின் மரபுரிமைகளை மாற்றி அமைக்கும் வகையில் அரசுடமையாக்குதல், மற்றும் பெளத்த சிங்கள மயமாக்கல் முயற்சிகளில் வெளிப்படையாகவே இயங்கி வருகின்றது. இதற்கு கடந்தகால மற்றும் தற்பொழுது ஆட்சியில் இருக்கின்ற அரசு என்று எல்லோருமே உடந்தையாக இருந்து வருகின்றார்கள்.
வடக்கில் குருந்தூர்மலை விவகாரம், தையிட்டி விவகாரம், வெடுக்குநாறி மலை என்று பல உதாரணங்களை இதற்கு சுட்டிக்காட்டலாம். இப்பின்னணியில், தெற்கில் தமிழ்க்கடவுள் முருகனுக்கு கோயில் எடுத்து வழிபடும் கதிர்காமத்தில் இருந்த “ஓம்” என்கிற தமிழ் எழுத்து நீக்கப்பட்டு சிங்கள எழுத்துகள் மாற்றப்பட்டு அக் கோயிற் பிரதேசம் எப்படி “கத்தறகம” வாக மாற்றப்பட்டதோ அதேபோன்றதொரு முயற்சிக்கான முன்னெடுப்புக்கள் கிழக்கிலும் ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றன.
கிழக்கில் அம்பாறை மாவட்டத்தில் அமைந்திருக்கின்ற உகந்தை முருகன் ஆலயத்திற்கு செல்லும் முன்வாயிலிற்கு் முன்பாக காணப்படுகின்ற கடற்கரையின் இடது புறத்தில் புதிதாக ஒரு புத்தர் சிலையினை நிறுவியிருக்கிறார்கள். இது அங்குள்ள கடற்படையின் உதவியோடு மேற்கொள்ளப்பட்டிருக்கிறது என்று கூறப்படுகிறது.
குறித்த பிரதேசத்தில் ஏற்கனவே முருகனுக்கு சிலை ஒன்றை அமைப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்போது வனவளத் திணைக்களம் உட்பட்ட அரச நிறுவனங்கள் அவற்றை தடுத்து நிறுத்தியிருக்கின்றன. இப்பின்னணியில் புதிதாக முளைத்த புத்தர் சிலை எதனை வெளிப்படுத்தி நிற்கிறது? சட்டமும் நீதியும் எப்பொழுதும் ஒரு இனத்திற்கு மட்டும்தான் சார்பானதா?
விடையற்ற இவ் வினாக்களை ஆராய்கிறது இன்றைய சமகாலம் நிகழ்ச்சி.....
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
