ரஷ்யாவின் புதிய களமுனை- கடும் எச்சரிக்கை விடுத்துள்ள உக்ரைன் பாதுகாப்பு படை
தமது நாட்டின் கிழக்கு நகரங்கள் மீது ரஷ்யா விரைவில் மீண்டும் தாக்குதலை தொடங்கலாம் என உக்ரைன் பாதுகாப்புப்படை எச்சரிக்கைவிடுத்துள்ளது.
உக்ரைன் மீது ரஷ்யா 48-வது நாளாக போர் தொடுத்து வருகிறது. போரை முடிவுக்கு கொண்டு வர பல நாடுகள் முயற்சித்த போதும் அந்த முயற்சிகள் தோல்வியிலேயே முடிந்து வருகின்றன. உக்ரைன் தலைநகர் கீவ், மரியப்போல், கார்கீவ், கார்சன் உள்பட பல்வேறு நகங்களில் ரஷ்ய படைகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றன.
ரஷ்ய படைகளின் தாக்குதலுக்கு உக்ரைன் இராணுவமும் பதிலடி கொடுத்து வருகிறது. மேலும், ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் இருந்த சில பகுதிகளை உக்ரைன் படைகள் மீண்டும் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவந்துள்ளன.
இந்த போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் இராணுவ ஆயுதங்கள், தளபாடங்கள் உள்ளிட்ட பல்வேறு உதவிகளை வழங்கி வருகின்றன.
இதற்கிடையில், இந்த போரில் ரஷ்யா தனது தாக்குதல் வேகத்தை வெகுவாக குறைத்துள்ளது. இந்நிலையில், கிழக்கு நகரங்கள் மீது ரஷ்யா மீண்டும் விரைவில் தாக்குதலை தொடங்கலாம் என்று உக்ரைன் பாதுகாப்புத்துறை எச்சரிக்கைவிடுத்துள்ளது.
ரஷ்யாவை ஒட்டியுள்ள உக்ரைனின் கிழக்கு நகரங்களான கார்கீவ், லுஹன்ஸ்க், டுனெட்ஸ்க், டுநிப்ரோபர்டிவ், ஷபோரிஷஷியா, டான்புரோ, மரியபோல் ஆகிய நகரங்கள் மீது ரஷியா விரைவில் மீண்டும் தாக்குதல் நடத்தலாம் என உக்ரைன் பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது.
இதனால், மக்கள் பாதுகாப்பான இடங்களில் இருக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
