ரஷ்ய துருப்புகள் மும்முனைத் தாக்குதல் - கடும் அழுத்தத்தில் உக்ரைன்
உக்ரைனிய இராணுவம் பக்முத் நகரை மையப்படுத்தி கடும் அழுத்தத்தில் இருப்பதை பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சகம் ஒத்துக்கொண்டுள்ளது.
ரஷ்ய துருப்புகளும் வாக்னர் கூலிப்படை துருப்புக்களும் பக்முத்தின் புறநகர்ப் பகுதிகளுக்குள் மேலும் முன்னேறி, உக்ரைனிய கட்டுப்பாட்டில் உள்ள பகுதியை மூன்று பக்கங்களாலும் சூழ்ந்திருப்பதை பிரித்தானிய உளவுத்துறை உறுதிப்படுத்தியுள்ளது.
கடும் அழுத்தம்
பக்முத் உட்பட கிழக்கு டொனெட்ஸ்க் பிராந்தியத்தின் பல்வேறு பகுதிகளில் ரஷ்யத் துருப்புக்களால் நடத்தப்பட்ட பல தாக்குதல்கள் முறியடிக்கப்பட்டுள்ளதாக உக்ரைனிய இராணுவம் தெரிவித்தாலும், உக்ரைனிய துரப்புகள் பக்முத் நகரை மையப்படுத்தி கடும் அழுத்தத்தில் இருப்பதாக பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சகம் கூறியுள்ளது.
நேற்று முற்றுகையிடப்பட்ட பக்முத நகரத்தை அருகிலுள்ள கிராமத்துடன் இணைக்கும் ஒரு முக்கிய விநியோக பாலத்தை ரஷ்யத் துருப்புகள் தகர்த்துள்ளதால் பக்முத்தின் சுற்றிவளைப்பு உறுதிப்படுத்தபட்டடுள்ளது.
பக்முத் நகரை கைப்பற்ற கடந்த சில மாதங்களாக முயற்சி செய்த ரஷ்யப் படையினர் தற்போது அங்கு முன்னேறியிருந்தாலும், பகமுத்தின் இராணுவ முக்கியத்துவம் குறைவாக உள்ளதாகவே பிரித்தானிய உளவுத்துறை கூறுகிறது.
மும்முனைத் தாக்குதல்
தற்போது ரஷ்ய துருப்புகளும்; வாக்னர் கூலிப்படை துருப்புக்களும் பக்முத்தின் புறநகர்ப் பகுதிகளுக்குள் மேலும் முன்னேறி, உக்ரேனிய கட்டுப்பாட்டில் உள்ள பகுதியை மூன்று பக்கங்களாலும் சூழ்ந்திருப்பதையும் பிரித்தானிய உளவுத்துறை ஏற்றுக்கொண்டுள்ளது.
இந்த நிலையில் ரஷ்ய பாதுகாப்பு அமைச்சர் செர்ஜி ஷோய்கு உக்ரைனில் ரஷ்ய படையினர் நிலைகொண்டுள்ள பகுதிக்கு ஒரு ஆச்சரியகரமான பயணத்தை மேற்கொண்டதை இன்று உறுதிப்படுத்திய ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் அந்தப யணத்தின் போது எடுக்கப்பட்ட காணொளிகளையும் வெளியிட்டுள்ளது.
