ரஷ்ய படைக்கெதிராக உக்ரைன் தீவிர தாக்குதல் : மீண்டும் சூடுபிடிக்கும் போர்க்களம்
அண்மைக்காலமாக மந்தமாகி வந்த உக்ரைன் - ரஷ்யப் போரானது தற்போது மீண்டும் சூடுபிடித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
ரஷ்யாவின் கட்டுப்பாட்டின் கீழ் இருக்கும் உக்ரைனின் கிரீமியா தீபகற்பத்தில் முன்னெப்போதும் இல்லாத வகையில் உக்ரைன் இராணுவம் தீவிர தாக்குதலை நடத்தியுள்ளது.
இந்தத் தாக்குதலிற்கு பதிலடி கொடுக்கும் முகமாக ரஷ்யாவும் உக்ரைனின் பகுதிகளில் கடுமையான தாக்குகல்களை முன்னெடுத்துள்ளது.
கடும் பின்விளைவுகள்
நேற்று முன் தினம் (23) கிரீமியா தீபகற்பத்தில் உக்ரைன் இராணுவம் வான்வழியாக ஆளில்லா விமானங்கள் மூலம் சரமாரியான தாக்குதல்கள் நடத்தபட்டது என ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
ஆனால் ரஷ்யாவின் வான் பாதுகாப்புப்படையினரால் இந்தத் தாக்குதல் வெற்றிகரமாக முறையடிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
உக்ரைன் நாட்டுக்குச் சொந்தமான கிரீமியா தீபகற்பத்தினை ரஷ்யா ஆக்கிரமித்து வைத்திருப்பதால் அந்தப் பகுதியை மீட்டெடுக்க உக்ரைன் முயன்று வருகிறது.
கிரீமியாவில் தாக்குதல் நடத்தினால் உக்ரைன் கடும் பின்விளைவுகளைச் சந்திக்கும், அதற்கான பதிலடித் தாக்குதலில் உக்ரைனின் ராணுவ நடவடிக்கைகளை முடிவு செய்யும் அதிபா் மாளிகை கூட தப்பாது என்று ரஷ்யா கடுமையான எச்சரிக்கை விடுத்திருந்தது.
இந்த எச்சரிக்கையினையும் மீறி உக்ரைன் குறித்த பகுதி மீது அவ்வப்போது தாக்குதல்களை நடத்தியிருந்தது ஆனால் இப்போது நேற்று முன் தினம் (24) மிகக்கடுமையான தாக்குதல்களை நடத்தியுள்ளது.
தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்
மேலும் ரஷ்யாவிற்கு எதிராக உருவாக்கப்பட்ட நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைய நினைப்பது ரஷ்யாவின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என தெரிவித்திருந்தது.
அதனை மீறி உக்ரைனின் தற்போதைய அரசு நேட்டோவில் இணைய ஆா்வம் காட்டி வந்தது, அதற்கு எதிர்ப்பு தெரிவித்து ரஷ்யா உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல்களை நடத்தியிருந்தது.
இரு நாடுகளுக்கும் இடையே சரமாரியாக வெடித்த போரில் உக்ரைனிற்குச் சொந்தமான நான்கு பிரதேசங்களின் கணிசமான பகுதிகளை ரஷ்யா கைப்பற்றியது.
அதன் பின்னர் எஞ்சிய பகுதிகளைக் கைப்பற்றுவதற்காக ரஷ்யாவும், இழந்த பகுதிகளை மீட்பதற்காக உக்ரைனும் போரிட்டு வருகின்றன.
நிலைமை இவ்வாறு சென்றுகொண்டிருக்கையில், அண்மைக் காலமாக இரு தரப்பிலும் எந்த முன்னேற்றமும் ஏற்படாமல் இருந்து வந்ததனால், உக்ரைன் போா் முடக்க நிலைக்கு வந்துவிட்டதாகக் கருதப்பட்டது.
இந்நிலையில், கிரீமியாவில் உக்ரைனும், அவ்டிவ்காவில் ரஷ்யாவும் தற்போது தாக்குதல்களை நிகழ்த்தி போரை மீண்டும் துவங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.