புடினுக்கு நேட்டோ இறுக்கம்!!
உக்ரைனில் படை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ள ரஷ்யா, இரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்தும் பட்சத்தில், உக்ரைன் யுத்தத்தில் தலையீடு செய்வதில்லை என்ற நேட்டோவின் தீர்மானங்களில் மாற்றம் ஏற்படலாம் என போலந்து தெரிவித்துள்ளது.
உக்ரைன் யுத்தத்தில் நேட்டோவின் தலையீடானது மூன்றாம் உலக யுத்தத்திற்கு வித்திடும் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எச்சரித்திருந்த நிலையில், போலந்து அதிபர் அண்ட்ரெஜ் டுடாவின் இந்தக் கருத்து வெளியாகியுள்ளது.
ரஷ்ய அதிபர் விளாடிமீர் புடின் இரசாயன ஆயுதங்களை பயன்படுத்துவதற்கான தயார்படுத்தல்கள் குறித்து போலந்து அதிபர் அண்ட்ரெஜ் டுடாவிடம் கேள்வி எழுப்பட்டுள்ளது.
இதற்கு பதில் அளித்த அவர், உக்ரைனில் ரஷ்ய படைகள் எதிர்நோக்கியுள்ள கடினமான சூழ்நிலைக்கு மத்தியில் விளாடிமீர் புடின் இரசாயன ஆயுதங்களை மாத்திரமல்ல, எந்தவொன்றையும் பயன்படுத்துவார் என குறிப்பிட்டுள்ளார்.
இரண்டாம் உலகப் போரின் பின்னர் இவ்வாறானதொரு பாரிய படை நடவடிக்கையை உலக நாடுகள் கண்டதில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அரசியல் ரீதியில் இந்த யுத்தத்தில் விளாடிமீர் புடின் தோல்வி அடைந்துவிட்டார் எனவும் இராணுவ ரீதியில் இதுவரை அவர் வெற்றிபெறவில்லை எனவும் அண்ட்ரெஜ் டுடா கூறியுள்ளார்.
அவ்வாறு இரசாயன ஆயுதத்தைப் பயன்படுத்தினால், நேட்டோ உக்ரைன் யுத்தத்தில் தலையிடுமா என எழுப்பட்ட கேள்விக்கு பதில் அளித்த போலந்து அதிபர், பாரிய அழிவுகளை ஏற்படுத்தும் நோக்குடன் இராசாயன ஆயுதங்களை விளாடிமீர் புடின் பயன்படுத்தினால் அது திருப்புமுனையாக அமையும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
அவ்வாறான ஒரு சூழல் ஏற்படுமாயின், உக்ரைன் யுத்தத்தில் தலையிடுவது குறித்து நேட்டோ இராணுவ கூட்டணி தீவிரமாக சிந்திக்கும் என அவர் கூறியுள்ளார்.
இது மிகவும் பாரதூரமானது என்பதுடன், அது ஐரோப்பாவிற்கு மாத்திரமல்லாமல் உலக நாடுகளுக்கே அச்சுறுத்தலாக அமையும் என அண்ட்ரெஜ் டுடா மேலும் குறிப்பிட்டுள்ளார்.
