உக்ரைனில் ரஷ்ய படைகளின் கோரமுகம்!! புடினுக்கு இறுக்கம்
உக்ரைன் - புச்சா நகரில் நடந்திருப்பது மூர்க்கத்தனமானது. இது போர் குற்றம். இதற்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் பொறுப்பேற்க வேண்டும் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வலியுறுத்தியுள்ளார்.
உக்ரைன் மீதான ரஷ்ய படைகளின் தாக்குதல் தொடர்ந்து ஒரு மாதத்திற்கும் மேலாக நீடித்து வருகிறது.
இந்த நிலையில், ரஷ்ய இராணுவம் வசமாகியிருந்த புச்சா நகரை உக்ரைனிய படைகள் கடந்த வாரம் மீண்டும் கைப்பற்றின.
அந்நகரம் ரஷ்ய படைகளின் கட்டுப்பாட்டில் இருந்ததால், ஏறக்குறைய ஒரு மாதமாக அந்த நகரத்திற்கு உக்ரைனியர்கள் யாரும் செல்ல முடியவில்லை.
இந்தச் சூழலில், புச்சா நகரில், 280 பேரின் உடல்களை பெரிய குழிகளில் ஒரே இடத்தில் போட்டு புதைத்துள்ளோம் என்று மேயர் அனடோலி பெடோருக் தெரிவித்துள்ளார்.
உக்ரைன் மீது ரஷ்ய இராணுவம் நடத்தி வரும் தாக்குதல்களில் ஏராளமான பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். குறிப்பாக புச்சா நகரில் கொத்துக்கொத்தாக மக்கள் இறந்து கிடந்தது உலக நாடுகளை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
ரஷ்ய அதிபர் புடின் போர்க் குற்றம் புரிந்திருப்பதாக பல்வேறு தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். ஆனால் இதனை ரஷ்யா தரப்பு மறுத்துள்ளது.
இந்நிலையில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுக்கு எதிராக போர்க்குற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வலியுறுத்தியுள்ளார்.
