வரிசை யுகத்தால் இலங்கையர்கள் பெரும் அவதி - எதிரணி சுட்டிக்காட்டு
உக்ரைன் - ரஷ்ய மோதலை காரணம் காட்டி இலங்கை அரசாங்கம் பொருட்களின் விலைகளை உயர்த்த முயற்சிக்கலாம் என எதிர்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.
எனினும், உலகில் எங்கோ ஒரு மூளையில் இடம்பெறும் மோதலை காரணம் காட்டி, அரசாங்கம் பிரச்சினைகளில் இருந்து விடுபட முயற்சித்தால் அதனை ஏற்றுக்கொள்ள முடியாது என அந்தக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
இதன்போது மேலும் தெரிவத்த அவர்,
“இந்த அரசாங்கத்தின் செயற்றிட்டங்கள் தோல்வியடைந்துள்ளன. சுபீட்சத்தை காணமுடியாமல் உள்ளது. நாட்டு மக்கள் இன்று வேதனையில் வாழ்ந்துகொண்டிருக்கின்றார்கள்.
மக்களுக்கு தமது அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள முடியாமல் வரிசைகளில் நின்று காலத்தை செலவழித்துக்கொண்டிருக்கின்றார்கள். இதனால் மக்கள் போராட்டங்களில் ஈடுபடுகின்றார்கள். பாதைகளில் கோபத்தில் கத்துகிறார்கள்.
ரஷ்ய - உக்ரைன் பிரச்சினையை எடுத்துக்கொண்டால், ஒரு நாடு இன்னொரு நாட்டை ஆள்வது உலக மரபின் படி ஏற்றுக்கொள்ளமுடியாத ஒன்று. அவர்களுக்கிடையில் அரசியல் முரண்பாடுகள் இருக்கலாம்.
உக்ரைன் நேட்டோவில் இணைவதற்காக முயற்சிகளை எடுத்ததால் தான் இந்த அனைத்து பிரச்சினைகளும் ஆரம்பமானது. ரஷ்யா அவர்களுடைய பாதுகாப்பை உறுதி செய்வதில் மும்முரமாக இருக்கின்றார்கள். இருந்தாலும் இன்னொரு நாட்டை ஆக்கிரமிக்க உலக மரபின் படி முடியாது.
ரஷ்ய - உக்ரைன் யுத்ததின் தாக்கம் நமது நாட்டிற்கு இருக்குமென்று நான் நினைக்கவில்லை. அது உலகில் மறு பக்கத்தில் இடம்பெற்றுக்கொண்டுள்ளது.
இதை காரணம் காட்டி இந்த அரசாங்கம் இங்கு பொருட்களில் விலைகளை உயர்த்தி மக்களை மேலும் கஷ்டத்தில் தள்ள முடியாது.
அப்படியாயின் இந்த நாட்டை புட்டினுக்கு தான் பொறுப்பாக்க வேண்டும். ஆகவே இந்த அரசாங்கம் பிரச்சினைகளில் இருந்து விடுபட இவற்றை காரணமாக காட்ட முயற்சித்தால் நாம் அதை ஏற்றுக்கொள்ளமாட்டோம்” என்றார்.
