உக்ரைன் - ரஷ்ய போர்! சிறிலங்காவிற்கு ஏற்படப்போகும் ஆபத்து - முன்னாள் அரச தலைவர் எச்சரிக்கை
ரஷ்யா - உக்ரைன் யுத்தம் சிறிலங்காவின் பொருளாதாரத்தை கடுமையாக பாதிக்குமெனவும், வறுமையுள்ள சிறிய நாட்டுக்கு இது பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்துமெனவும் சிறிலங்காவின் முன்னாள் அரச தலைவரும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவருமான மைத்திரிபால சிறிசேன (Maithripala Sirisena) தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பொலன்னறுவை மாவட்ட மாநாட்டில் உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,
சிறிலங்காவின் பொருளாதார நிலைமைகள் தொடர்பில் வட்ட மேசை மாநாட்டுக்கு வந்து அனைவரும் கலந்துரையாடவேண்டும். சரிவடைந்து செல்லும் நாட்டை மீட்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ரஷ்யா - உக்ரைன் யுத்தம் இலங்கையின் பொருளாதாரத்தை பாதிக்கும் ஒன்றாகுமெனவும், இதனால் எண்ணெய் பீப்பா ஒன்றை கொள்வனவு செய்ய எவ்வளவு செலவாகுமென்பது மிகப்பெரிய கேள்வி.
அதேபோன்று சீனா, தாய்வானை தாக்க வட்டமிடுவருவதாகவும், உலகில் பலம் வாய்ந்த நாடுகள் யுத்தத்தில் ஈடுபடுவதை அவதானிக்க முடிகின்றது.
இதனால் இலங்கையை போன்ற சிறிய வறுமையுள்ள நாட்டுக்கு எந்த அளவுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பது பாரதூரமான கேள்வியாகும்.
ஆகவே, இந்த நாட்டை மீட்டெடுப்பதற்கு அனைவரும் தியாகம் செய்யவேண்டுமெனவும், பதவி, பலம் முக்கியமல்ல.
மக்கள் படும் வேதனைகளிலிருந்து பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமெனவும், இன்று நாட்டின் நிலைமையை குறைவாக மதிப்பீடு செய்ய முடியாதெனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
