உலக நாடுகளுக்கு உக்ரைன் முதல் பெண்மணி பகிரங்க கடிதம்
“புடினை தடுத்து நிறுத்தவில்லை என்றால் நமக்கு பாதுகாப்பான இடம் இருக்காது” என உக்ரைனின் முதல் பெண்மணி ஒலேனா ஸெலென்ஸ்கி, சர்வதேச சமூகத்தை நோக்கி, கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த கடிதத்தில் போரின் பயங்கரங்களை குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகள் மீது போர் செலுத்தும் தாக்கம் குறித்து விபரித்துள்ளார்.
இந்த போரில் இதுவரை உயிரிழந்த சில குழந்தைகளின் பெயர்களையும் அவர் குறிப்பிட்டுள்ளார்:
“ஓக்டிர்காவின் சாலையில் எட்டு வயது சிறுவன் ஆலிஸ், அவனுடைய தாத்தா அவனை காப்பாற்ற முயன்றபோது உயிரிழந்தான்.
“கீவில் போலினா என்பவர், ஷெல் தாக்குதலில் தன் பெற்றோர்களுடன் உயிரிழந்தாள்.
“ஆர்செனி என்ற 14 வயது சிறுவன், தலையில் தாக்கப்பட்டு உயிரிழந்தான்.தீவிரமான தாக்குதல்கள் காரணமாக, உரிய நேரத்தில் அப்பகுதிக்கு அம்புலன்ஸ் செல்ல முடியாததால், அவரை காப்பாற்ற முடியவில்லை”.
‘பொதுமக்களுக்கு எதிராக போர் தொடுக்கவில்லை’ என ரஷ்யா கூறுகிறது, நான் கொல்லப்பட்ட குழந்தைகளின் பெயர்களை முதலில் கூறுகிறேன்” என அவர் தெரிவித்துள்ளார்.
சர்வதேச சமூகம் மற்றும் உக்ரைனிலிருந்து அகதிகளை ஏற்றுக்கொண்ட அண்டை நாடுகளுக்கு அவர் நன்றி தெரிவித்துள்ளார்.
உக்ரைனிய வான் பகுதியை விமானங்கள் பறப்பதற்குத் தடை (No Fly Zone) செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்க வேண்டும் என்ற தன் கணவரும் உக்ரைன் அதிபருமான ஸெலென்ஸ்கியின் வேண்டுகோளை மீண்டும் அவர் வலியுறுத்தினார்.
நேட்டோ இந்த நடவடிக்கையை எதிர்த்துள்ளது, ஏனெனில் இது ரஷ்ய விமானங்களுடன் இராணுவ ரீதியாக ஈடுபடும் மேற்கத்தைய படைகளை உள்ளடக்கும். “உக்ரைனிய வான்பகுதியை மூடுவதற்கு அதிகாரத்தில் உள்ளவர்கள் எங்களுக்குத் தேவை. இதனை செய்தால், போரை எங்களால் சமாளிக்க முடியும்” என அவர் தெரிவித்துள்ளார்.
“உக்ரைனில் நடக்கும் போர் ‘எங்கோ நடப்பது அல்ல’. ஐரோப்பாவில் நடக்கும் போர், ஐரோப்பிய ஒன்றியத்தின் எல்லைகளுக்கு அருகில் நடக்கும் போர் என இக்கடிதம் வாயிலாக உலகுக்கு தெரிவிக்கிறேன்” என தெரிவித்துள்ளார்.
“அணு ஆயுதப் போர் குறித்து அச்சுறுத்தும் புடினை நாம் தடுத்து நிறுத்தவில்லை என்றால், நம் யாருக்கும் இந்த உலகில் பாதுகாப்பான இடம் என்பது இருக்காது” என தெரிவித்துள்ளார்.
