இலங்கைக்கு வரலாற்று முக்கியத்துவமான தருணம் - ஜ.நா வில் அழுத்தம் கொடுக்கும் வோல்கர் டர்க்
பல தசாப்தங்களாக ஆதிக்கம் செலுத்தி வந்த வன்முறை மற்றும் தண்டனையின்மை சுழற்சிகளிலிருந்து மீள்வதற்கான வரலாற்றுச் சிறப்புமிக்க வாய்ப்பை இலங்கை தற்போது பெற்றுள்ளதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க் (Volker Türk) தெரிவித்துள்ளார்.
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தற்போது மேற்கொள்ளப்பட்டுவரும் தன்னிச்சையான கைதுகள் மற்றும் தடுப்புக்காவல்களுக்கு உடனடி தடை விதிக்குமாறு இலங்கை அரசாங்கத்தை வோல்கர் டர்க் வலியுறுத்தியுள்ளார்.
ஜெனீவாவில் ஆரம்பமாகியுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60 ஆவது கூட்டத் தொடரில் இலங்கை தொடர்பாக அறிக்கையை சமர்பித்து உரையாற்றும் போதே அவர் இந்த விடயங்களை தெரிவித்துள்ளார்.
வடக்கு கிழக்கின் இராணுவமயமாக்கல்
மாற்றத்தக்க சீர்திருத்தம், பொறுப்புக்கூறல், உண்மை மற்றும் நீதி ஆகியவற்றிற்காக நாடு முழுவதிலுமிருந்தும், அரசாங்கத்திற்கு தெளிவான ஆணை கிடைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதனிடையே அண்மையில், தாம், இலங்கைக்கு விஜயம் செய்த போது, நாட்டின் மிக நீண்டகால பிரச்சினைகளுக்கு புதிய திசை நோக்கிய பயணத்திற்கு அந்த நாட்டின் தலைமை உறுதியளித்துள்ளதாகவும் வோல்கர் டர்க் கூறியுள்ளார்.
இந்தநிலையில், புதிய அணுகுமுறை, ஒத்திசைவானதும், காலக்கெடுவை வழங்கக்கூடியதாகவும் அமைய வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
பொறுப்புக்கூறல், நீதியை வழங்குதல், நீண்டகாலமாக இலங்கை மக்கள் அனுபவித்துவரும் அரசியல் ரீதியான பாகுபாடுகள் மற்றும் பிரிவினையை நீக்குதல் போன்ற விடயங்களில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் வோல்கர் டர்க் தெரிவித்துள்ளார்.
வடக்கு மற்றும் கிழக்கின் இராணுவமயமாக்கல், காணிகளை திருப்பியளித்தல் மற்றும் அனைத்து மட்ட ஆட்சிக்கும் அதிகாரப் பகிர்வு உள்ளிட்ட விரிவான பாதுகாப்புத் துறை சீர்திருத்தத்திற்கான அவசரத் தேவை உள்ளதாகவும் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க் தனது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
