பல்கலைக்கழக மாணவர்கள் மீது பயங்கரவாதத் தடைச் சட்டம் பிரயோகிக்கப்படமாட்டாது! உறுதியளித்த பிரதமர்
போராட்டத்தின் போது கைது செய்யப்பட்டுள்ள பல்கலைக்கழக மாணவர்கள் மீது பயங்கரவாதத் தடைச் சட்டம் பிரயோகிக்கப்படமாட்டாது என நாடாளுமன்றத்தில் பிரதமர் தினேஷ் குணவர்த்தன உறுதியளித்துள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ நேற்று சபையில் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே பிரதமர் தினேஷ் குணவர்த்தன மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிராக அரசு அரச பயங்கரவாதத்தை கட்டவிழ்த்து விட்டது. மக்களின் அரசியல் உரிமைகள், கருத்து வெளியிடும் உரிமைகள் பறிக்கப்பட்டதா?' என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் கேள்வி எழுப்பினார்.
பதிலளித்த பிரதமர்
அரசு, கைதுசெய்யப்பட்ட பல்கலைக்கழக மாணவர்கள் மீது பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்காது. ஆனாலும், பொதுச் சட்டங்களின் கீழ் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும்" என்றும் பிரதமர் பதிலளித்துள்ளார்.
இந்நிலையில், அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே உள்ளிட்ட 'கோட்டா கோ கம' ஆர்ப்பாட்டக்காரர்கள் மூவரைப் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்க அரசு முன்னெடுத்த நடவடிக்கைக்கு சர்வதேச சமூகத்திடமிருந்து கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டிருந்தது.
அத்துடன் இந்த மாதம் ஜெனிவாவில் ஆரம்பமாகும் ஐ.நா. மனித உரிமைகள் சபை அமர்விலும் இந்த விடயம் உள்ளடக்கப்பட்டுள்ள நிலையிலேயே அரசு மேற்கண்டவாறு தனது நிலைப்பாட்டை மாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

