புதிய ஐ.நா ஆணையாளர் இலங்கை மீது கறார்
ஐ.நா மனித உரிமைப் பேரவை அரங்கான ஜெனிவாவில் இருந்து கொழும்பு அதிகார மையத்திற்கு நற்செய்திகள் கிட்டிக்கொள்வதாக இல்லை.
அந்த வகையில், ஐ.நா மனித உரிமைக் குழு நேற்றும் இன்றும் இலங்கையின் மனித உரிமை நிலவரங்களை மீளாய்வு செய்துள்ளது.
தற்போதைய மனித உரிமைப் பேரவை அமர்வில் எகிப்து, துர்கானிஸ்தான், செம்பியா, பனாமா, பேரு ஆகிய நாடுகளின் மனித உரிமை நிலவரங்கள் தற்போது மீளாய்வு செய்யப்படும் போதிலும், இந்தப் பட்டியலில் உள்ள இலங்கை மீதான மீளாய்வு தான், இலங்கை அரசாங்கத்திற்கும் அதேபோல புலம்பெயர் தமிழ் சமூகம் உட்பட்ட ஈழத்தமிழ் சமூகத்திற்கும் முக்கியமானதாக இருக்கிறது.
இலங்கை மீதான மீளாய்வு
நேற்று முழு நாளும் இன்று அரை நாளும் இந்த விடயங்கள் மீளாய்வு செய்யப்பட்டன. இந்த மீளாய்வின் போது, இலங்கையில் குடிசார் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பாக அனைத்துலக நியமங்கள் கடைப்பிடிக்கப்படுகின்றதா என்ற கரிசனை எழுப்பப்பட்டது.
இந்த அனைத்துலக உடன்பாடுகளில், இலங்கை அரசாங்கம் எவ்வாறு நடந்துகொள்கின்றது என்பதையும், அதேபோல இலங்கை குறித்து ஏற்கனவே சுயாதீன நிபுணர்கள் குழு வழங்கிய அறிக்கையிடல்களும் மீளாய்வுக்கு உட்படுத்தப்பட்டன.
இந்த அமர்வு நேற்று ஆரம்பிக்க முன்னரே இலங்கை குறித்து கருத்து வெளியிட்ட ஐ.நாவின் புதிய மனித உரிமை ஆணையாளர் வோல்கர் ட்ரக், இலங்கையில் உள்ள கடுமையான பாதுகாப்புச் சட்டங்கள் குறித்த விமர்சனத்தை வெளியிட்டார்.
இந்தச் சட்டங்கள் மாற்றப்படவேண்டியதன் அவசியத்தையும் ஐ.நா சார்பாக வலியுறுத்தியிருந்தார். கடந்த வருட நடுப்பகுதி வரை, ஐ.நாவின் மனித உரிமை ஆணையாளராக மிச்செல் பச்லெட் இருந்தார்.
ஐ.நாவின் புதிய ஆணையாளர்
அவர் தனது பதவியில் இருந்து ஓய்வுபெற்ற பின்னர், புதிய ஆணையாளராக பதவியேற்ற அவுஸ்ரேலியாவைச் சேர்ந்த வோல்கர் ட்ரக் இலங்கை குறித்து விமர்சித்த முக்கியமான சந்தர்ப்பமாக இது அமைந்தது.
இலங்கையின் கடன் மற்றும் பொருளாதார நெருக்கடியை மையப்படுத்தி அரசாங்கம் மக்களின் அடிப்படை உரிமைகளை தடைசெய்வதாக விசனப்பட்ட ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர், குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்காத கலாசாரம் இலங்கையில் ஆழமாக வேரூன்றி உள்ளதாகவும் விமர்சித்தார்.
இலங்கையின் பாதுகாப்பு மற்றும் உளவுத்துறை ஆகியன குடிசார் மற்றம் பாதிக்கப்பட்ட மக்களை துன்புறுத்துவதையும், கண்காணிப்பதையும் முடிவுறுத்த வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இலங்கையில் நிலைமாறுகால நீதி வழங்கப்படும் விடயத்தில் ஐ.நா மனித உரிமைப் பேரவை உறுதியுடன் இருப்பதாவும் அவர் தெரிவித்தார்.
