மகிந்தவை குறிவைக்கவில்லை! அரசாங்க தரப்பு பகிரங்கம்
முன்னாள் ஜனாதிபதிகளின் உரிமைகளை ரத்து செய்யும் சட்டமூலம் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை குறிவைத்து கொண்டு வரப்படவில்லை என அமைச்சரவை பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்திர ஊடக சந்திப்பில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
மகிந்தவை வெளியேற்ற திகதி
அத்துடன், குறித்த சட்டமூலம் அனைத்து முன்னாள் ஜனாதிபதிகளுக்கும் அவர்களின் துணைவியருக்கும் பொருந்தும் வகையில் தயாரிக்கப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மகிந்தவை வெளியேற்றுவதற்கு திகதி ஏதும் நிர்ணயிக்கப்பட்டுள்ளதா என ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில் அமைச்சர் நளிந்த மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
சட்ட நடைமுறை
அத்துடன், சட்டமூலம் நடைமுறைக்கு வந்த பின்னர், அது சம்பந்தப்பட்ட அனைத்து முன்னாள் ஜனாதிபதிகளுக்கும் பொருந்தும் என்றும், நீண்டகாலம் சட்டமன்றத்தில் பணியாற்றியவர்கள் மற்றும் நிறைவேற்று ஜனாதிபதியாக இருந்தவர்கள் சட்டத்தின்படி நடந்து கொள்வார்கள் என்று தாம் எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
“நாங்கள் முன்னாள் ஜனாதிபதிகளை அவர்களது உத்தியோகபூர்வ இல்லங்களில் இருந்து நீக்க எந்த திகதியும் நிர்ணயிக்கவில்லை.
சட்டமூலம் கொண்டு வரப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தில் அது சட்டமாக நிறைவேற்றப்பட்ட பின்பு, அவர்கள் சட்டத்துக்கு ஏற்ப நடந்து கொள்வார்கள் என்று நம்புகிறோம்,” என்றார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
