ஆளும் கட்சியின் நாகரிகம் அற்ற வார்த்தைப் பிரயோகம்! சபாநாயகர் கூறிய பதில்
ஐக்கிய மக்கள் சக்தியின் இரத்தினபுரி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தலதா அத்துகோரலவிற்கு, சில ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களினால் வார்த்தை பிரயோகத்தில் பாலியல் ரீதியான கருத்துக்கள் நாடாளுமன்றத்தில் வெளியிடப்பட்டமை குறித்து ஆராய்வதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவிக்கின்றார்.
ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹினி கவிதர்னவினால் இந்த விடயம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் இன்று கவலை வெளியிட்ட நிலையிலேயே, சபாநாயகர் இதனை குறிப்பிட்டிருந்தார்.
அமைச்சர் உதய கம்மன்பிலவிற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை விவாதத்தின் போது, நாடாளுமன்ற உறுப்பினர் தலதா அத்துகோரலவை பார்த்து, சில ஆளும் கட்சி உறுப்பினர்கள் பாலியல் ரீதியிலான வார்த்தை பிரயோகங்களை முன்வைத்தனர்.
ஆளும் கட்சி உறுப்பினர்கள் இவ்வாறு செயற்படும் போது, சபாநாயகர் அந்த விடயம் தொடர்பில் கருத்திற்கொள்ளாது, சிரித்துக்கொண்டிருந்தமையும் கவலை அளிப்பதாக அவர் தெரிவித்தார்.
இதையடுத்து, குறித்த சம்பவம் தொடர்பில் ஆராய்வதாக சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன தெரிவித்துள்ளார்.