டுபாயிலிருந்து நாடு கடத்தப்பட்ட மற்றுமொரு குற்றக் கும்பல் உறுப்பினர் கைது
டுபாயில் (Dubai) இருந்து நாடு கடத்தப்பட்ட சந்தேக நபரான ஸ்ரீதரன் நிரஞ்சன் என்ற 'டிங்கர்' கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் இன்று (01) அதிகாலை கைது செய்யப்பட்ட அவர் பின்னர் பேலியகொட காவல் நிலைய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கொழும்பு 15 இல் வசிக்கும் 36 வயதுடைய இந்த சந்தேக நபர், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றம் மற்றும் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட பழனி ஷிரான் க்ளோரியன் அல்லது "கொச்சிக்கடை ஷிரான்" இன் சீடராக அடையாளம் காணப்பட்டுள்ளார்.
பயணத் தடை விதிக்கப்பட்டிருந்தது
கிரேண்ட்பாஸ் காவல்துறை பிரிவில் உள்ள மஹவத்த பொது மயானத்திற்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்த முச்சக்கர வண்டியில் ஒருவரை சுட்டுக் கொன்ற குற்றத்துடன் தொடர்புடைய சம்பவத்தில், வந்த காரின் சாரதியாக இவர் செயற்பட்டதாகக் கூறப்படுகிறது.
மேலும், 19.08.2025 அன்று பேலியகொட காவல்துறை பிரிவில் உள்ள ஸ்ரீ ஞானரத்ன மாவத்தையில் ஒருவரை சுட்டுக் கொன்று, மற்றொரு நபரை கடுமையாகக் காயப்படுத்திய குற்றத்தைச் செய்யத் தேவையான துப்பாக்கிகளை கொண்டு சென்றதற்காகவும் இவர் தேடப்பட்டு வந்தார்.
இந்தநிலையில், அவருக்கு பயணத் தடை விதிக்கப்பட்டிருந்தபோதிலும், விசாரணையில் ஓகஸ்ட் 19 அன்று வெளிநாட்டுக்கு தப்பி சென்றது தெரியவந்தது.
இந்த சந்தேக நபர் புதுக்கடை இலக்கம் 05 நீதவான் நீதிமன்றத்தில் இன்று முன்னிலைப்படுத்தப்பட உள்ள நிலையில் பேலியகொட காவலதுறையினர் மேலதிக விசாரணைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
