ஒற்றையாட்சிக்கு எதிராக செயற்பட்டால் மொட்டுக் கட்சியில் இருந்து விலகுவேன்! இனவாதத்தை கக்கிய சரத் வீரசேகர
ஒற்றையாட்சிக்கும் இராணுவத்தினருக்கும் எதிரான செயற்பாடுகளுக்கு பொதுஜன பெரமுன ஆதரவு வழங்குமாயின், தாம் கட்சியில் இருந்து வெளியேறுவேன் என கடும்போக்குவாத நாடாளுமன்ற உறுப்பினரான சரத் வீரசேக தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து அவர் தெரிவித்ததாவது, நான் தற்போதும் பொதுஜன பெரமுனவிலேயே இருக்கின்றேன். அதனை கைவிட்டு செல்லவில்லை.
கட்சியில் இருந்து வெளியேறுவேன்
பொதுஜன பெரமுனவிலேயே எனக்கு வேட்புமனு கிடைத்தது. பொதுஜன பெரமுனவிலேயே நான் போட்டியிட்டேன். பொதுஜன பெரமுன வீழ்ந்துள்ள நிலையில், அதனை விட்டுச் செல்வது சரியான ஒன்றாக இருக்காது.
ஆகவே தான் நான் தொடர்ந்தும் பொதுஜன பெரமுனவில் இருக்கின்றேன்.
இந்த நாட்டை பிளவுபட செய்ய முயற்சித்தால், இந்த நாட்டின் வளங்களை வெளிநாடுகளுக்கு படிப்படியாக விற்பனை செய்தால், மற்றும் இராணுவத்தினருக்கும், நாட்டின் ஒற்றையாட்சிக்கும் பொருந்தாத செயற்பாடுகளில் பொதுஜன பெரமுன ஈடுபடுமானால், நான் அதில் இருந்து விலகுவேன்.
அவ்வாறு இல்லாத பட்சத்தில் தொடர்ந்தும் தாம் பொதுஜன பெரமுனவிலேயே இருப்பேன்.
தேர்தல் வேட்பாளர்
பொதுஜன பெரமுன சார்பாக அதிபர் தேர்தலில் வேட்பாளர் ஒருவரை நிறுத்தாமல் இருப்பது தொடர்பாக கட்சியின் தலைமைத்துவமே தீர்மானிக்கும். அது தொடர்பாக தற்போது கருத்துக் கூறுவது காலத்திற்கு முந்தைய ஒன்று.
பல்வேறு தரப்பினரும் பல்வேறு கருத்துக்களை கூறுகின்றனர். நினைத்துக்கொண்டிருப்பவர்களை விட வேறு நபர்களும் தேர்தலில் போட்டியிடக் கூடும். ஒகஸ்ட் மாதம் அதிபர் தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் செய்யப்பட வேண்டும்.
அதற்கு முன்னர் பொதுத் தேர்தல் நடத்தப்படுமா என்பதும் எமக்கு தெரியாது. அடுத்த இரண்டு மூன்று மாதங்களில் வேட்பாளர்கள் தொடர்பாக தெரியவரும் என சுட்டிக்காட்டியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள் |