இலங்கைத் தமிழருக்கும் பிரித்தானிய ஆளும் கட்சிக்கும் இடையில் உறவைப் பலப்படுத்தும் திட்டம்!
தமிழ் மக்களின் அரசியல், சர்வதேச நீதிப் பொறிமுறை மற்றும் பொருளாதார அபிவிருத்தி ஆகிய விடயங்கள் தொடர்பில் பிரித்தானியாவின் ஆளும் கட்சி மாநாட்டில் கலந்துரையாடப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பிரித்தானியாவின் ஆளும் கட்சியான கன்சர்வேட்டிவ் கட்சியின் மாநாடு இம்மாதம் 2ம் திகதி தொடக்கம் 5ம் திகதி வரை பர்மிங்ஹாம் நகரில் நடைபெறுகிறது.
இதில் இலங்கையில் இருந்து ரெலோவின் ஊடகப் பேச்சாளர் குருசுவாமி சுரேந்திரன் இலங்கைத் தமிழ் மக்கள் பிரதிநிதியாக அழைக்கப்பட்டுள்ளார்.
பிரித்தானிய தமிழ் கன்சர்வேட்டிவ் அமைப்பினர் இந்த ஏற்பாட்டை முன்னெடுத்துள்ளனர். குறிப்பாக இலங்கைத் தமிழ் மக்களுக்கும் பிரித்தானிய ஆளும் தரப்பிற்குமான உறவுகளைப் பலப்படுத்துவதாக இப்பயணம் அமையும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரெலோ ஊடகப் பேச்சாளர் பிரித்தானியாவில் முக்கிய சந்திப்பு
மேலும் ரெலோவின் ஊடகப் பேச்சாளர் குருசுவாமி சுரேந்திரன், பிரித்தானிய ஆளும் தரப்பினரின் பிரதானிகளோடும் முக்கிய சந்திப்புகள் இடம்பெற உள்ளன. தமிழ் மக்களின் அரசியல், சர்வதேச நீதிப் பொறிமுறை மற்றும் பொருளாதார அபிவிருத்தி ஆகிய விடயங்கள் இச்சந்திப்பில் பிரதான பங்கு வகிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரித்தானியாவின் தற்போதைய பிரதமர் லிஸ்ட் ட்ரஸ் பிரதமராகத் தெரிவு செய்யப்படுவதற்கு சில நாட்களுக்கு முன்னதாக நடந்த இணைய வழிச் சந்திப்பில் சுரேந்திரன் கலந்து கொண்டிருந்தார்.
லிஸ்ட் ட்ரஸ் உறுதியளிப்பு
அந்தக் கலந்துரையாடலில், லிஸ்ட் ட்ரஸ், இலங்கையில் பொறுப்புக் கூறல், நல்லிணக்கம் மற்றும் மனித உரிமை விடயங்களை வலியுறுத்துவதாகவும் உறுதியளித்திருந்தார்.
அதனையடுத்து, ஜெனீவா கூட்டத்தொடரில் பங்கு பற்றிய பின்னர் பிரித்தானிய ஆளும் கட்சியின் மாநாட்டிற்கு சுரேந்திரன் பயணமாகி உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
