தாரிக் அகமட்டின் சிறிலங்கா விஜயம்- கோட்டாபய அரசாங்கத்தின் பொய்ப்பரப்புரை அம்பலம்!
பிரித்தானியாவின் தெற்காசிய மற்றும் ஐ.நா விவகாரங்களுக்கான அமைச்சர் தாரிக் அகமட் கடந்த வாரம் இலங்கைக்கு மேற்கொண்ட சுற்றுப் பயணம் குறித்து சிறிலங்காவுக்கான பிரித்தானிய தூதரகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
நேற்று வெளியிடப்பட்டிருந்த இந்த அறிக்கை மூலம் சிறிலங்கா அரசாங்கம் மேற்கொண்ட பொய்ப்பரப்புரை அம்பலமாகியுள்ளது. சிறிலங்கா மனித உரிமை நிலவரங்களில் முன்னேற்றம் அடைந்துள்ளது என தாரிக் அகமட், சிறிலங்கா அரசாங்கத்தை பாராட்டியமை தொடர்பான எந்த ஒரு கருத்தும் இந்த அறிக்கையில் இல்லையென்பது குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
பிரித்தானியாவின் தெற்காசிய மற்றும் ஐ.நா விவகாரங்களுக்கான அமைச்சர் தாரிக் அகமட் கடந்த வாரம் இலங்கைக்கு மேற்கொண்ட சுற்றுப் பயணத்தின் இறுதியில் சிறிலங்கா அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவை சந்தித்து பேச்சு நடத்தியிருந்தார்.
இந்தப் பேசுக்களுக்குப் பின்னர் இது தொடர்பாக அறிக்கையிட்ட அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச, சிறிலங்கா மனித உரிமை நிலவரங்களில் முன்னேற்றம் அடைந்துள்ளதாக தாரிக் அகமட் பாராட்டியதாக குறிப்பிட்டிருந்தார்.
ஆனால் அதன் பின்னர் இது தொடர்பாக தனது டுவிட்டர் பதிவை வெளியிட்ட தாரிக் அகமட், சிறிலங்கா நல்லிணக்கம், நீதி மற்றும் மனித உரிமை நிலரங்களில் முன்னேறவேண்டிய அவசியத்தை வலியுறுத்தியிருந்தார்.
இந்த நிலையில் தாரிக் அகமட்டின் இலங்கை பயணம் தொடர்பாக பிரித்தானியத் தூதரகம் நேற்று ஒரு அறிக்கையிடலை செய்துள்ளது. அதில் தாரிக் அகமட்டுடனான சந்திப்புக் குறித்து சிறிலங்கா அரச தலைவர் கோட்டபய ராஜபக்சவின் பணியகம் குறிப்பிட்டதைப் போல சிறிலங்கா மனித உரிமை நிலவரங்களில் முன்னேற்றம் அடைந்துள்ளது என தாரிக் அகமட்ட பாராட்டியதான எந்த ஒரு கருத்தும் இல்லை.
மாறாக இலங்கையில் நல்லிணக்கம், நீதி மற்றும் மனித உரிமைகளைப் பாதுகாப்பதன் அடிப்படையில் நிரந்தரமான மற்றும் உள்ளடக்கிய சமாதானத்தை கட்டியெழுப்புவது முக்கியம் என்ற விடயம் வலியுறுத்தப்பட்டதாகவே குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன் வடக்கு கிழக்குக்கு அவர் மேற்கொண்ட பயணத்தின் போது நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறலில் எவ்வாறு முன்னேறுவது என்பது குறித்து தமிழர் தரப்பின் கருத்துக்கள் கேட்டறியப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
I met President @GotabayaR ?? to discuss global challenges including climate change and economic recovery from #Covid19. I emphasised the need for GoSL to make progress on human rights, reconciliation, and justice and accountability, in line with the UN HRC process and the SDGs. pic.twitter.com/QZ23K3Ij00
— Lord (Tariq)Ahmad of Wimbledon (@tariqahmadbt) January 20, 2022
