சிறிலங்கா அரசால் திட்டமிட்டு சூறையாடப்படும் தமிழர் இருப்பு - பிரித்தானியாவில் முக்கிய சந்திப்பு!
பிரித்தானிய வெளிவிவகார அமைச்சு அதிகாரிகளிற்கும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்திற்குமான (ரெலோ) சந்திப்பு நேற்று மாலை 13-4-2023 லண்டனில் உள்ள வெளிவிவகார அமைச்சு காரியாலயத்தில் நடைபெற்றது.
இதில் இலங்கையில் இருந்து சென்றிருந்த ரெலோ செயலாளர் நாயகமும் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் (ஜனா) மற்றும் பிரித்தானிய கிளையின் தலைவர் சாம் சம்பந்தன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
லண்டனில் முக்கிய சந்திப்பு
இச்சந்திப்பில், எதிர்வரும் செப்டம்பர் மாதம் நடைபெற இருக்கும் மனித உரிமைகள் கூட்டத்தில் உள்வாங்க வேண்டிய பல முக்கிய விடயங்கள், பயங்கரவாத தடைசட்டம், தொடர்ச்சியான நில அபகரிப்பு தொல்பொருள்,வன இலாகா, பாதுகாப்பு அமைச்சு ஊடாக வட கிழக்கில் தமிழ் இனத்தின் இனபரம்பலை குறிவைத்து மேற்கொள்ளப்படும் அரசின் திட்டமிட்ட செயற்பாடுகள், கடந்த நாலு வருடங்களாக திட்டமிட்டு இழுத்தடிப்பு செய்யபடும் மாகாண சபை தேர்தல், உள்ளூராட்சி தேர்தல், தனது அரசியல் அமைப்பையே மீறி செயற்படும் அரசின் செயற்பாடுகள் குறித்து சுட்டிக்காட்டப்பட்டது.
இழுத்தடிக்கப்படும் தேர்தல்
மேலும் 72 வருடங்களாக இழுத்தடிப்பு செய்யப்படும் தமிழ் இனப்பிரச்சினை, 12 வருடங்களாக எதையுமே நடைமுறைப்படுத்தாது UNHRC தீர்மானங்கள், 16 தடவைகள் IMF பரிந்துரைகள் எதையுமே நடைமுறைப்படுத்தாமல் மீண்டும் 17 வது தடவையாக IMF இடம் கையேந்தும் நிலைக்கு சென்ற அரசின் தவறான கொள்கைகளை சுட்டிக்காட்டி இவ்வாறான ஒரு அரசுடன் மூன்றாவது தரப்பு மத்தியஸ்தம் இன்றி அரசியல் தீர்வுக்கான சாத்தியமான அறிகுறிகள் இல்லையெனவும் பிரித்தானியாவை இந்தியாவுடன் இணைந்து இலங்கையில் தமிழ் இனத்திற்கு ஒரு நிரந்தர அரசியல் தீர்விற்கான அழுத்தம் கொடுக்கப்படவேண்டும் என்று எடுத்துக் கூறப்பட்டது.
மூன்றாம்தரப்பு மத்தியஸ்தமே தீர்வு
மேலும் அரசியல் கொந்தளிப்பான நாட்டில் பொருளாதார வளர்ச்சி அடையமுடியாது என்றும், நாட்டின் வளர்ச்சிக்கு பதிலாக கிளர்ச்சியை அடக்கவே சர்வதேச நிதிகளை அரசு இயந்திரம் பாவிக்கும் என்று சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
