உற்றுநோக்கலாக மாறிய சிறிலங்கா விவகாரம் - சர்வதேச விசாரணையே தீர்க்கமான முடிவு - ஜெனிவாவில் வலியுறுத்து
சிறிலங்காவிற்கு எதிரான போர்க்குற்றங்கள் மற்றும் மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக, மனித உரிமைகள் பேரவை அமர்வில் முக்கியத்துவம் வாய்ந்ததாக பேசப்படும் நிலையில், இந்தியா கருத்துத் தெரிவித்திருந்தாலும் சிறிலங்கா தொடர்பான விடயத்தில் மௌனம் காத்துள்ளது.
சிறிலங்காவிற்கு எதிராக பிரித்தானியா தலைமையிலான நாடுகளால் கொண்டுவரப்படவுள்ள பிரேரணை தொடர்பில், பிரதான நாடுகளுடனான கலந்துரையாடல் ஒன்று ஜெனிவாவில் இன்றைய தினம் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது.
இவ்வாறான நிலையிலேயே அண்டை நாடான இந்தியா, சிறிலங்கா தொடர்பில் எதுவித கருத்தும் தெரிவிக்காமல் மௌனம் காத்தமை பெரும் விமர்சனத்திற்குள்ளாகியுள்ளதாக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
நிராகரித்த சிறிலங்கா
பிரித்தானியா தலைமையில் இவ்வாறு கொண்டு வரப்பட்ட பிரேரணையை சிறிலங்கா முற்றாக நிராகரித்துள்ளது.
இவ்வாறான நிலையில், மனித உரிமைகள் பேரவையில், சீனா, பாகிஸ்தான், ஈரான், பிலிப்பைன்ஸ், ரஷ்யாமற்றும் வியட்னாம் போன்ற நாடுகள் சிறிலங்காவிற்கு ஆதரவாக கருத்துத் தெரிவித்திருந்தன.
அத்துடன் இது ஒரு நாடு தொடர்பான விடயம், இதில் வேறு நாடுகள் தலையிடுவது பொருத்தமற்றது எனவும் தெரிவித்திருந்தன.
எனினும், நோர்வே, சுவிஸ் மற்றும் பிரான்ஸ் உள்ளிட்ட பல நாடுகள் சிறிலங்காவிற்கு எதிராகதீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என தீர்க்கமாகத் தெரிவித்திருந்தன.
மௌனம் காத்த இந்தியா
இதேவேளை குறித்த அமர்வில் இந்தியா கருத்துத் தெரிவித்திருந்தாலும் சிறிலங்கா தொடர்பான விடயத்தில் மௌனம் காத்திருந்தது.
இதன் போது தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் இது தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையில்,
இறுதி யுத்தம் முடிவடைந்து 13 ஆண்டுகளாக சிறிலங்காவில் அதிகாரத்தில் இருந்த அரசாங்கங்கள் தமிழருக்கான தீர்வு வழங்குவதாக தொடர்ச்சியாக வாக்குறுதிகளை வழங்கி வந்தன ஆனாலும் இது வரை ஆட்சிக்கு வந்த எந்த அரசாங்கமும் கொடுத்த வாக்குறுயை நிறைவேற்றவில்லை.
ஆகவே இலங்கையில் இடம்பெற்ற போர்க் குற்றங்கள் மற்றும் மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் தொடர்பில் இனியும் சிறிலங்காவிற்கு வாய்ப்புக்கள் வழங்க முடியாது ஆகவே சர்வதேச விசாரணையே வேண்டும் எனவும் தீர்க்கமாக தெரிவித்துள்ளார்.
பலரது அதிருப்திக்குள்ளான பவானி பொன்சேகாவின் கருத்து
இதேவேளை, இலங்கை மனித உரிமை வழக்கறிஞரும், ஆர்வலருமான பவானி பொன்சேகா கருத்துத் தெரிவிக்கயைில்,
இலங்கையில் 30 வருடங்களுக்கும் மேலாக இடம்பெற்ற, தமிழருக்கான உரிமை கோரும் போராட்டமும், தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட இனப்படுகொலையும், அண்மையில் தென்னிலங்கையில் பொருளாதார நெருக்கடி காரணமாக மக்களால் முன்னெடுக்கப்பட்டிருந்த கிளர்ச்சியும் ஒன்று என்பதாகத் தெரிவித்திருந்தார்.
அவரது அவ்வாறான கருத்து மனித உரிமைகள் பேரவையில் இருந்த பலரதும் அதிருப்திக்குள்ளாகியுள்ளது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 51 ஆவது கூட்டத் தொடர் சுவிட்ஸர்லாந்தின் ஜெனிவா நகரில் கடந்த 12ஆம் திகதி ஆரம்பமாகியிருந்தது.
அந்த அமர்வின் முதலாம் நாள் நிகழ்ச்சி நிரலில் சிறிலங்கா நிலவரங்களுக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளமை சர்வதேசத்தில் ஒரு உற்றுநோக்கலை ஏற்படுத்தியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.


புத்திர சோகத்தில் ஈழ அன்னையர்கள்... இன்று அன்னையர் தினம்… 21 மணி நேரம் முன்
