வேடிக்கை பார்ப்பது மட்டுமே ஐ.நாவின் பணியா!
உலகில் போரும் அதனால் விளைகின்ற துயரங்களுக்கும் குறைவில்லாமல் தான் இருக்கின்றது. அன்று ஈழம் மிகப் பெரிய இனவழிப்புப் போரை சந்தித்தது.
இன்று பாலஸ்தீனம் ஒரு இனவழிப்புப் போருக்கு முகம் கொடுத்துக் கொண்டிருக்கிறது. போர், வன்முறை, பஞ்சம், பொருளதார நெருக்கடி என்று உலகில் மக்கள் துயரங்களை ஏதோ ஒரு வித்தில் அனுபவித்துக் கொண்டுதான் இருக்கின்றனர்.
எனினும் யுத்தம் காரணமாக உலகில் மக்கள் எதிர்கொள்ளும் துயரங்களை இந்த உலகம் அணுகின்ற விதமே சிக்கல் நிறைந்ததாய் இருக்கிறது.
தத்தம் நலன்களுக்கு ஏற்றால்போல உலகில் ஒடுக்கப்படுகிற மக்களின் துயரங்கள கையாளப்படுவது உலகில் அனைத்து மக்களையும் பாதிக்கவே செய்கிறது.
ஐ.நா தினம்
ஒக்டோபர் 24 ஐ.நா தினமாகும். உலக நாடுகளில் அமைதி நிலைபெறவும் பாதுகாப்பு உறுதிசெய்யப்படுவதற்குமாக ஐக்கிய நாடுகள் சபை உருவாக்கப்பட்ட தினம் இதுவாகும்.
அந்த வகையில் 1947ஆண்டு ஐக்கிய நாடுகள் பொதுச் சபை ஐநா பட்டய ஆவணத்தின் ஆண்டுவிழாவான ஒக்டோபர் 24ஆம் தினத்தை, ஐக்கிய நாடுகள் நாளாக "உலக மக்கள் அனைவரும் ஐக்கிய நாடுகளின் நோக்கம், சாதனைகள் குறித்து அறியும் வண்ணமாகவும் அவர்களது ஆதரவைப் பெறும் வண்ணமாகவும் கொண்டாட" தீர்மானம் செய்யப்பட்டது.
1971ஆம் ஆண்டில் இந்த நாள் பன்னாட்டு விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டதுடன் உறுப்பு நாடுகளும் இந்த விடயத்தை ஏற்றுக்கொண்டிருந்தன.
1945ஆம் ஆண்டு ஜூன் 25ஆம் நாளன்று, சான் பிரான்சிஸ்கோவில் ஐக்கிய நாடுகள் சாசனம் கையெழுத்திடப்பட்டது. முதன் முதலில் 51 நாடுகள் கையெழுத்திட்டன.
அதனையடுத்து ஒக்டோபர் 24ஆம் நாளில் இருந்து ஐ.நா அவை நடைமுறைக்கு வந்தது. ஐக்கிய நாடுகள் நாளன்று உலக மக்களிடையே ஐநாவின் நோக்கங்களையும் சாதனைகளையும் குறித்த விப்புணர்வை ஏற்படுத்த பல சந்திப்புகள், கருத்தரங்குகள், கண்காட்சிகள் மற்றும் பண்பாட்டு நிகழ்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அதேவேளை அக்டோபர் 20 முதல் 26 வரை ஐக்கிய நாடுகள் வாரமாகவும் கொண்டாடப்படுவதும் குறிப்பிடத்தக்கது. தற்போது தென்சூடான் நாட்டுன் 193 நாடுகள் ஐ.நா சபையில் அங்கம் வகிக்கின்றன.
ஐ.நாவின் பணி
ஐக்கிய நாடுகள் சபை உலக நாடுகளின் அமைதி மற்றும் பாதுகாப்பை உறுதிப்படுத்த ஆறு அங்கங்களைக் கொண்டுள்ளது.
பொதுச்சபை, பாதுகாப்பு மன்றம், பொருளாதார மற்றும் சமூக மன்றம், பன்னாட்டு நீதிமன்றம், அறங்காவலர் அவை மற்றும் செயலகம் என்ற இந்த ஆறு அங்கங்கள் வாயிலாக ஐ.நா தனது முன்னெடுப்புக்களைச் செய்து வருகிறது.
உலகின் பாதுகாப்பை உறுதிப்படுத்த பாதுகாப்பு அவை செயற்பட்டு வருகின்றது. இதில் 12 நாடுகள் அங்கம் வகிக்கின்றன. அத்துடன் அமெரிக்கா, ரஷ்யா, பிரான்ஸ், இங்கிலாந்து, சீனா ஆகிய நாடுகளுக்கு மட்டும் தடையில்லா அதிகாரம் எனப்படும் வீட்டோ பவர் வழங்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு கவுன்சில் தாக்கம் மிக்க அதிகாரம் மிக்க அமைப்பதாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை பொருளாதார மற்றும் சமூக செயல்பாடுகளையும் பொருளாதார மற்றும் சமூக கவுன்சில் என்ற பெயரில் இயங்கும் அமைப்பு நிர்வகிப்பு மற்றும் கண்காணிப்பை செய்கிறது.
அத்துடன் அறங்காவலர் அவை, உறுப்பு நாடுகளை கண்காணித்து நெறிப்படுத்தும் பணியை முன்னெடுக்கின்றது.
உறுப்பு நாடுகளின் சர்வதேச பிரச்னைகளை விசாரித்து தீர்ப்பு வழங்கும் பணியை பன்னாட்டு நீதிமன்றம் செய்கிறது. நெதர்லாந்தில் பன்னாட்டு நீதிமன்றம் அமைந்துள்ளது.
உலக நாடுகளில் இனப்படுகொலை, மனிதருக்கு எதிரான குற்றங்கள், போர்க் குற்றங்கள் செய்தவர்கள் மீது சட்ட நடவடிக்கை முதலிய பணிகளை மேற்கொள்ள பன்னாட்டு நீதிமன்றம் உருவாக்கப்பட்டது.
இவைகளைத் தவிர நிர்வாகப் பணிகளை நிறைவேற்றும் பணியை ஐநா செயலகம் செய்கிறது.
ஈழ விடுதலைப் போராட்டம்
இலங்கைத் தீவில் தமிழ் மக்களுக்கு எதிரான போர் முப்பது ஆண்டுகளாக நடைபெற்றிருந்தது. அத்துடன் ஈழத் தமிழ் மக்கள் தமது உரிமைக்கும் விடுதலைக்குமான போராட்டத்தை முப்பது ஆண்டு காலமாக ஆயுதம் தாங்கி முன்னெடுத்திருந்தனர்.
அகிம்சை வழியிலான போராட்டங்களுக்கு வன்முறையே இலங்கை அரசால் பரிசளிக்கப்பட்ட நிலையில்தான் ஈழத் தமிழ் மக்கள் ஆயுதம் ஏந்த வேண்டிய நிலை ஏற்பட்டது.
இந்த நிலையில் ஈழத் தமிழ் மக்கள் தமது விடுதலைக்கான தேவையையும் நியாயத்தையும் உலக சமூகத்தினருக்கு எடுத்துரைத்து போராடி வந்துள்ளனர்.
வரலாறு முழுவதும் ஈழத் தமிழ் மக்களுக்கு எதிராக சிறிலங்கா அரசு இன ஒடுக்குமுறை மற்றும் இனவழிப்பை தொடர்ந்து வருகின்றது.
இந்த நிலையில் இலங்கையில் வடக்கு கிழக்கில் செறிந்து வாழ்கின்ற ஈழத் தமிழ் மக்கள் தமது தாயகத்தை அங்கீகரிக்கக் கோரிய தனிநாட்டுப் போராட்டத்தை முன்னெடுத்தனர்.
இதேவேளை காலத்திற்கு காலம் விட்டுக்கொடுப்புக்களும் நல்லணெண்ண முயற்சிகளுடன் விடுதலைப் புலிகள் இயக்கம் சமாதான முன்னெடுப்புக்களிலும் தம்மை ஈடுபடுத்தியதுடன் தமிழர்களுக்கு நியாயமான அரசியல் தீர்வை பேச்சுவார்த்தை வழியாக முன்வைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியது.
என்ற போதும் போரைத் தொடர்வதையும் தமிழ் மக்களின் பேரம் பேசும் சக்தியும் காவலுமாக இருந்த விடுதலைப் புலிகள் இயக்கத்தை அழித்து ஈழவிடுதலைப் போராட்டத்தை அழிப்பதையே இலங்கை அரசு தனது தீர்வாகவும் அணுகுமுறையாகவும் கொண்டிருந்தது.
இறுதிப்போரும் ஐ.நாவும்
இந்த நிலையில் 2002இல் மேற்கொள்ளப்பட்ட சமாதான முயற்சிகளில் இருந்து இலங்கை அரசு ஒரு தலைப்பட்சமாக விலகி போரை ஆரம்பித்தது. இதன் போது ஐக்கிய நாடுகள் சபையின் பணி என்பது சிறிலங்கா அரசின் இனவழிப்புப் போருக்கு காவலாக இருப்பதாகவே அமைந்திற்று.
போரை தடுத்து, இனப்படுகொலையை நிறுத்தி, அமைதி வழியில் ஈழத் தமிழ் மக்களுக்கு தீர்வை வழங்க ஐ.நா அழுத்தம் கொடுக்கவில்லை. பாரிய ஆயுதங்களால் போரிடாமல் சிறிய ஆயுதங்களால் போரிடுங்கள் என்று இலங்கை அரசுக்கு ஐ.நா கூறிய ஆலோசனை என்பது, இனப்படுகொலைப் போருக்கான அங்கீகாரமாகவே இருந்தது.
கைப்புண்ணுக்கு கண்ணாடி எதற்கு என்றால் போல சிறிலங்கா அரசின் இன ஒடுக்குமுறைகளை ஐ.நாவுக்கு எடுத்துரைத்துத்தான் புரிய வேண்டும் என்றில்லை என்பதும் இங்கே கவனிக்க வேண்டியது.
முள்ளிவாய்க்காலில் மக்கள் கொத்துக்கொத்தாக கொல்லப்பட்ட போது ஐ.நா வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது.
இனப்படுகொலைகளை தடுத்து, போர்க்குற்றங்களை தடுத்து உலக மக்களை காப்பாற்றுதல் என்ற ஐ.நாவின் பணி குறித்த சாசனங்களும் ஒப்பந்தங்களும் காற்றில் பறந்தன.
ஈழத் தமிழ் மக்கள்மீதான இனப்படுகொலையின் போது ஐநா இலங்கை அரசுக்கு சார்பாக செயற்பட்டு போர்வலயத்தைவிட்டு வெளியேறியது.
சர்வதேச நீதி கிடைக்குமா?
இந்த நிலையில் போர் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு இன்றைக்கு 14 வருடங்கள் ஆகின்றன. ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைப் பேரவையில் இலங்கை விவகாரம் கையளாப்படுகிறது.
இலங்கை அரசு மீது நடவடிக்கை எடுக்க முடியாத நிலையே நீடித்து வருகின்றது. இலங்கைமீது ஐ.நா மென்ரகமான தீர்மானங்களை நிறைவேற்றிய போதும் அதனை இலங்கை அரசு பொருட்டாக கருாத நிலையே நிலவுகிறது.
உள்ளக விசாரணைப் பொறிமுறையை நடாத்தி பொறுப்புக்கூறலை நிறைவேற்ற வேண்டும் என்ற மனித உரிமைப் பேரவையின் கோரிக்கையை இலங்கை தொடர்ந்து நிறைவேற்றாத நிலையில் மனித உரிமைப் பேரவையின் பல ஆணையாளர்கள் வெறும் கவலையையும் அதிருப்தியையும் மாத்திரம் தெரிவித்து வருவதையே பார்த்து வருகின்றோம்.
போர் நடைபெற்ற சமயத்தில் ஐ.நா சபை செயலாளராக இருந்த பான்கீ மூன், இலங்கைப் போரில் ஐ.நா தமது கடமையை சரிவர செய்யவில்லை என்று வருத்தம் தெரிவித்தார்.
வேடிக்கை பார்த்தும் வருத்தம் தெரிவிப்பது மாத்திரமே ஐ.நாவின் பணியா? எம்மீதான இனப்படுகொலைக்கு சர்வதேச விசாரணை வேண்டும் என்றும் சர்வதேச நீதி வேண்டும் என்றும் ஈழத் தமிழ் மக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள்.
அந்த அடிப்படையில் ஈழத் தமிழ் மக்களுக்கு அமைதியான வாழ்வு அமைய வேண்டும் எனில் தம்மை தாமே ஆளும் சுயநிர்ணய உரிமை கொண்ட அரசியல் தீர்வை முன்வைக்க வேண்டும் என்றும் ஈழ மக்கள் கோருகின்றனர்.
ஐ.நாவும் அதன் பாதுகாப்பு சபையும் மனித உரிமைப் பேரவையும் அதன் பணிகளை உண்மையாகவே மேற்கொண்டால் ஈழத் தமிழர்களுக்கு சர்வதேச நீதியும் விடியலும் அமைதியும் கிடைக்கும்.
பொறுப்பு துறப்பு!
இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் Theepachelvan அவரால் எழுதப்பட்டு, 23 October, 2023 அன்று ஐபிசி தமிழ் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் ஐபிசி தமிழ் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.