வலுக்கும் இஸ்ரேல் - ஹமாஸ் போர் : ஐ.நா பொதுச்செயலர் கண்டனம்
இஸ்ரேல்- ஹமாஸ் இடையே தொடர்ந்து வரும் போரில் இதுவரை காசாவில் 5,087 பேர் உயிரிழந்துள்ளதாக காசாவின் சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
இதில், ஹமாஸின் தாக்குதலைக் காரணம் காட்டி ஒட்டுமொத்த பலஸ்தீன மக்களையும் இஸ்ரேல் தண்டிப்பதனை நியாயப்படுத்த முடியாது என ஐ.நா வின், பொதுச் செயலாளர் அன்டனியோ குட்டரெஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல்-ஹமாஸ் இடையிலான போர், 18 வது நாளாக நீடிக்கும் நிலையில் பலி எண்ணிக்கை, 7 ஆயிரத்தை கடந்துள்ளது.
இந்நிலையில் வடக்கு காசாவில் இருந்து உடனடியாக வெளியேறி தெற்கு காசாவுக்கு செல்ல பலஸ்தீன மக்களுக்கு இஸ்ரேல் இராணுவம் எச்சரிக்கையும் விடுத்துள்ளது.
பதவி விலக வேண்டும்
இவ்வாறிருக்கையில், காசாவில் இதுவரை 5,087 பேர் உயிரிழந்துள்ளனர், இதன்படி, 2,055 குழந்தைகள், 1,119 பெண்கள், 217 முதியவர்கள் என பலதரப்பட்டோர் போரில் பலியாகியுள்ளனர்.
மேலும், 15,273 பேர்வரையில் காயம் அடைந்துள்ளனர் என காசாவின் சுகாதாரத்துறை தரப்பிலிருந்து தகவல் வெளியாகியுள்ளது.
ஆனால் ஹமாஸ் தாக்குதலினால் இஸ்ரேலில் இதுவரை 1,400 பேர் உயிரிழந்துள்ளனர் என இஸ்ரேல் இராணுவம் தகவல் வெளியிட்டுள்ளது.
The grievances of the Palestinian people cannot justify the horrific attacks by Hamas.
— António Guterres (@antonioguterres) October 25, 2023
Those horrendous attacks cannot justify the collective punishment of the Palestinian people.
இது தொடர்பாக தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் ஐ.நா பொதுச்செயலாளர் அன்டனியோ குட்டரெஸ் வெளியிட்டுள்ள பதிவில் பலஸ்தீனர்களின் குறைபாடுகளை கூறி ஹமாஸ் நடத்தும் தாக்குதலை நியாயப்படுத்த முடியாது, அதேபோல ஹமாஸின் தாக்குதலை காரணம் காட்டி ஒட்டுமொத்தமாக பலஸ்தீன மக்களையும் இஸ்ரேல் தண்டிப்பதையும் நியாயப்படுத்த முடியாது, என அவர் பதிவிட்டிருந்தார்.
இதற்கிடையே ஐ.நா பொதுச்செயலாளர் அன்டனியோ குட்டரெஸ் பதவி விலக வேண்டும் என ஐ.நா.,வில் இஸ்ரேல் நிரந்தர பிரதிநிதி கிலாட் எர்டன் வலியுறுத்தியுள்ளார், இதனால் ஐ.நா விற்கும் இஸ்ரேலிற்கும் இடையே மோதல் வலுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.