தமிழர்களின் தீர்வு விடயத்தில் அமெரிக்காவின் முழுமையான ஒத்துழைப்பு வேண்டும்! ஜூலி சங்கிடம் எடுத்துரைத்த சம்பந்தன்
தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை வென்றெடுப்பதற்கு அமெரிக்கா தனது முழுமையான ஒத்துழைப்பினை வழங்கும் என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் (Julie Sung) தெரிவித்துள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எ.சுமந்திரன் ஆகியோரை நேற்றைய தினம் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இதன்போதே அவர் இந்த உறுதிமொழியை வழங்கியுள்ளார்.
மேலும் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் எதிர்வரும் செப்டெம்பரில் கொண்டுவரும் விரிவான அறிக்கைக்கு அமெரிக்கா முழுமையான ஒத்துழைப்புகளை வழங்கும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இக்கலந்துரையாடலின் போது, அரசியல் தீர்வு விடயங்கள், ஐ.நா.மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்காவின் வகிபாகம் மற்றும் அரசியலமைப்பு உருவாக்கம் ஆகிய விடயங்கள் குறித்தே முக்கியத்துவம் கொடுத்து கலந்துரையாடப்பட்டுள்ளது.
சர்வதேச நாடுகளின் மூலமாக தீர்வுகளை பெற்றுக்கொடுக்க வேண்டும் என்பதே தமது நிலைப்பாடு என்றும் எனவே அரசியல் தீர்வு விடயத்தில் அமெரிக்காவின் கூடுதல் அழுத்தம் இருக்கவேண்டும்.
ஆகவே தொடர்ச்சியாக அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுத்தேனும் இலக்குகளை அடைய ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங்கிடம் சம்பந்தன் வலியுறுத்தியுள்ளார்.

