குறைந்த வருமானம் பெறும் மக்களுக்கு வழங்கப்படவிருந்த இலவச அரிசி: அம்பலமானது பாரிய மோசடி
மனித பாவனைக்கு தகுதியற்ற ஒரு இலட்சத்து எழுபதாயிரம் கிலோகிராம் அரிசியை மோசடியான பொதியிடல்களுக்காக எடுத்துச் செல்லப்பட்ட நிலையில் அதனை நுகர்வோர் விவகார அதிகார சபையின் அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.
நுகர்வோர் அதிகார சபையின் அனுராதபுரம் பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கு அமைய நேற்று(12) பிற்பகல் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன் படி விசாரணைகளினர் போது, குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு இந்த அரிசியை விநியோகிக்க திட்டமிட்டிருந்தமை தெரியவந்துள்ளது.
காலாவதித் திகதி மாற்றம்
கிரிப்பேவ பிரதேசத்தில் உள்ள தனியார் அரிசி ஆலைக்கு 08 லொறிகள் மூலம் 170,000 கிலோகிராம் அரிசி எடுத்துச் செல்லப்பட்டு மீண்டும் பொதி செய்யப்பட்ட போது இந்தச் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அரிசியின் பொதிகளில் எழுதப்பட்ட திகதி கடந்த 30ஆம் திகதி காலாவதியாகியிருந்த நிலையில், மனித பாவனைக்கு தகுதியற்ற அரிசி இயந்திரத்தனமாக சுத்தம் செய்யப்பட்டு, காலாவதித் திகதி எதிர்வரும் 30 நாட்களுக்கு செல்லுபடியாகும் வகையில் மீள அமைக்கப்பட்டுள்ளது.
கைது நடவடிக்கை
குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கான இலவச அரிசி வழங்கும் திட்டத்திற்கு இந்த அரிசியை பயன்படுத்த திட்டமிட்டுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
நுகர்வோர் அதிகார சபையினால் கையகப்படுத்தப்பட்ட அரிசி கையிருப்பு சீல் வைக்கப்பட்டுள்ளதுடன், அரிசி ஆலையின் உரிமையாளரும் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |